பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் தமிழகத்தின் முதல் மினி டைடல் பூங்கா  இனி சென்னைக்கு செல்ல தேவையில்லை  திமுக அரசுக்கு பட்டதாரிகள் பாராட்டு

விழுப்புரம், பிப். 21: தமிழகத்தில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில் தமிழகத்தின் முதல் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஐடி துறையில் வேலைக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு புலம் பெயராமல் படிச்ச சொந்த ஊரிலேயே ஆயிரக்கணக்கானோருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பை திமுக அரசை ஏற்படுத்தி கொடுத்ததால் பட்டதாரிகள் பாராட்டி வருகின்றனர். ஐடி நிறுவனங்களில் வேலைக்கு சென்றால் கை நிறைய சம்பளம் என்ற கனவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு காத்திருக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஐடி நிறுவனங்கள் சென்னையிலும் அதற்கடுத்தபடியாக கோவையில் தான் இருக்கிறது.

இங்கு படித்துவிட்டு செல்லும் எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை. ஐடி நிறுவனங்கள் வேலைக்காக சென்னைக்கும், கோவைக்கும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்து வேலை செய்து வருகின்றனர். எந்த மாவட்டத்தில் இன்ஜினியரீங் படித்தாலும் சென்னை நகரக்குதான் ஐடி நிறுவனங்களில் பணிக்கு சேர வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்றவும் தொழில் நிறுவனங்கள் இல்லாத, கல்வி, பொருளாதாரத்தின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அதன்படி நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு தமிழகத்தின் மாணவர்களையும், தொழிலாளர்களையும் தொழிலகங்களையும் தயார்படுத்தி கொள்வதற்கு தொலைநோக்கு பார்வையுடன் “நான் முதல்வன்” திட்டம், “அறிவுசார் நகரம்” மற்றும் ஆராய்ச்சி பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐடி துறையில் சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக நகரங்களை உருவாக்கும் வகையில் கடந்த 2021ம் ஆண்டு மினி டைடல் பூங்காக்கள் திட்டத்தை அரசு அறிவித்தது.

அதில் முதல் மாவட்டமாக விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு 2022ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் ரூ.31 கோடியில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விரைவில் இந்த டைடல் பார்க் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் இதன் மூலம் 500 தொழில் வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதனால் திமுக அரசை பட்டதாரிகள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவழகன் கூறுகையில், விழுப்புரம் சென்னைக்கு அடுத்தபடியாக தென்மாவட்டங்களை இணைக்கக்கூடிய முக்கிய பகுதியாக உள்ளது. ரயில் நிலையம், மிகப்பெரிய போக்குவரத்து வசதிகளை கொண்ட மையப்பகுதியான விழுப்புரம் மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வருகிறது. பொறியியல் பட்டம் முடித்தவர்கள் ஐடி துறை வேலைக்காக சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது தமிழக அரசு விழுப்புரம் மாவட்டத்தில் திறக்கப்பட்ட மினி டைடல் பார்க் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், அவர்கள் ேவறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு வேலைக்காக படையெடுப்பதை தவிர்த்து சொந்த ஊரிலேயே பணியாற்றி பண, காலவிரயத்தை தவிர்த்து தன்னிறைவு வாழ்க்கை அடைய முடியும். ஆயிரம் பேருக்கு வேலை கிடைப்பதன் மூலம் அவர்களின் குடும்பங்களும் பாதுகாக்கப்படும். இந்த மினி டைடல் பார்க் மேலும் விரிவடைந்து விழுப்புரத்தை சுற்றியுள்ள மாவட்ட இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டும். இளைஞர்களின் பல ஆண்டுகால கனவை நனவாக்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஹோட்டல், ஜிம் எல்லாமே நவீன வசதிகளுடன் இருக்கு…
சென்னை நகரை போன்று விழுப்புரத்தில் திறக்கப்பட்ட மினி டைடல் பூங்கா நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 63,000 சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் நான்கு தளங்களுடன், குளிர்சாதன வசதிகள், தொலை தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு, மின் தூக்கிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு, கட்டிட மேலாண்மை, மின்விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை, ஹோட்டல் மற்றும் ஜிம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த மினி டைடல் பார்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்