பழநியில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகள்: அப்புறப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

 

பழநி, அக். 2: பழநியில் சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகளை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு சராசரியாக 1 வருடத்தில் சுமார் 1.20 கோடி பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் இளநீர் கடைகளும் அதிகளவு உள்ளன.

இக்கடைகளில் பக்தர்கள் அருந்தி விட்டு போடும் இளநீர் கூடுகளை சாலையோரங்களில் வீசக்கூடாதென்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூடுகளை கடைக்காரர்கள் சேமித்து வைத்து, நகராட்சி குப்பை சேகரிப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த நடைமுறை தற்போது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. கடைக்காரர்கள் இளநீர் கூடுகளை சாலையோரங்களில் வீசிச் சென்று விடுகின்றனர். அங்கு இளநீர் கூடுகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன.

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூக்கி வீசப்பட்ட இளநீர் கூடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உண்டாகி உள்ளது. இதனால் டெங்கு போன்ற கொசுக்களால் உருவாகும் நோய்கள் ஏற்படும் சூழல் உண்டாகி உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் இளநீர் கூடுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை