பள்ளி கட்டிட திறப்பு விழாவில் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு: அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்

 

திருப்புத்தூர், ஜூன் 25: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கலாசாலை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் மூன்று வகுப்பறைகள் கொண்ட சுமார் 40 லட்சம் மதிப்பில் கட்டிடம் பழைய மாணவர்களால் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் பொருளாளர் அம்மையப்பன் வரவேற்றார். பள்ளி தலைவர் வெள்ளையன், செயலர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நூற்றாண்டு விழா கட்டிடத்தை திறந்து வைத்து தலைமை உரை ஆற்றினார். மேலும் கடந்தாண்டு 10 மற்றும் 12ம் வகுப்பில் இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கினார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது; பின்தங்கிய மாவட்டமாக இருக்கக்கூடிய சிவகங்கை மாவட்டமானது கல்வியில் மாநில அளவில் இரண்டாம் இடத்திற்கு தேர்ச்சி பெற்றுள்ளது.

இதனால் நம் மாவட்டம் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நூற்றாண்டு கடந்த இப்பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் தமது பெற்றோர்களை நேசிப்பதை போன்று இப்பள்ளியையும் நேசித்து வகுப்பறை கட்டிடங்களை கட்டிக் கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்பொழுது படிக்கக்கூடிய மாணவ,மாணவிகள் பல்வேறு துறைகளில் சாதித்து காட்ட வேண்டும் என்றார்.
விழாவில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை