பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தஞ்சாவூர் : பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவிற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று ஆய்வு செய்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி:  எல்கேஜி, யுகேஜி வகுப்பில் 93ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது கூடுதலாக 52 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ அதே முறையை பின்பற்ற கூறியுள்ளோம். தற்போது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நியமித்த பிறகு முழுமையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளையும் சேர்ந்து 7 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் என சேர்த்தால் 9 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தாண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். இந்தாண்டு முழுமையாக பள்ளிகள் நடைபெறுகிறது. எந்த பாடத்தையும் குறைக்க போவதாக இல்லை. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறார் சினிமா மூலம் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சென்னையில் ஓடப்போகும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்; வெற்றிகரமாக உற்பத்தி நிறைவு!

ஒட்டன்சத்திரம்- கரூர் சாலையில் ஊர் பெயர் பலகையை மறைத்த மரக்கிளைகள் உடனே அகற்றம்: பொது மக்கள் நன்றி தெரிவிப்பு

மஞ்சூர்- கோவை சாலையில் அரசு பஸ்சை வழிமறித்த குட்டி யானை: பயணிகள் அச்சம்