பருவநிலை மாற்றத்தால் ‘சீசன் காய்ச்சல்’ பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவமனையில் குவியும் மக்கள்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் காய்ச்சல் பரவி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலில் இருந்து புதிதாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் அதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலாலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் மற்றும் அவ்வப்போது பெய்யும் பருவ மழையால் வெப்ப நிலை மாற்றம் ஏற்பட்டு காய்ச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.சிவகங்கை நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள், திருப்புவனம், காளையார்கோவில், காரைக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் காய்ச்சல் சரியாகாத நிலையில் தனியார் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்கின்றனர். இதனால் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.மருத்துவ உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு இருப்பதால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீசனில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும், காய்ச்சல் சில நாட்கள் நீடிக்கிறது எனில் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேவைப்படும் பரிசோதனைகள் செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் சிகிச்சைக்கு சென்று பல நாட்கள் குணமாகாத நிலையில் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனை வராமல் காய்ச்சல் அறிகுறி தென்பட்ட உடனேயே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்றார்….

Related posts

தாக்குதல் புகாரில் மதுரை துணை மேயர் மீது வழக்கு

சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை

சீமானிடம் மரியாதையில்லை; நாதக நிர்வாகி விலகல்