பரமக்குடியில் 575 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

பரமக்குடி, ஜூன் 22: ராமநாதபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பல் ஊர், ஊராகச் சென்று பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்குகின்றனர். பின்னர் அவற்றை வெளிமாநிலங்களில் விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் தொடர்ச்சியாக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை மதுரை மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் விஜய்கார்த்திக் ராஜா உத்தரவின்பேரில், ராமநாதபுரம் சிவில் சப்ளை சிஐடி சப்இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில், எஸ்எஸ்ஐ குமாரசாமி மற்றும் ஏட்டு தேவேந்திரன் ஆகியோர், பரமக்குடி தாலுகாவில் நயினார்கோவில்-ஆர்.எஸ்.மங்கலம் சாலையில், காட்டாரங்குடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகனத்தில் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த கிஷோர் என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை