பனிமய மாதா ஆலய திருவிழாவில் வணிகர்களுக்கான சிறப்பு திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவில் வணிக பெருமக்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 3ம் நாளான நேற்று காலை 11 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட கடலோர மக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 5.45 மணிக்கு 2ம் திருப்பலி, காலை 6.30 மணிக்கு புனித அந்தோனியார் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள், பள்ளிகளுக்கான திருப்பலி, 7.30 மணிக்கு திரேஸ்புரம் பங்கு இறைமக்கள், சலேசியத் துறவிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், 8.30 மணிக்கு அலங்காரத்தட்டு பங்கு இறைமக்கள், புனித கார்மல் அன்னை அருட்சகோதரிகளுக்கான திருப்பலி, 9.30 மணிக்கு முத்தையாபுரம், எம்.சவேரியார்புரம் பங்குகளின் இறைமக்களுக்கான திருப்பலி நடைபெற்றது.

தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பாளை. ஆயர் அந்தோனிசாமி தலைமையில் வணிக பெருமக்களுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அருட்தந்தையர்கள் ஜெயக்குமார், சுந்தரிமைந்தன், ஜோசப், ஆரோக்கியதாஸ், கிராசியுஸ், ரீகன் மற்றும் திரளான வணிகர்கள், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 7.15 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது. திருவிழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு டிவைன் மெர்சி தியான இல்லம், நகர செபக்குழுக்களான நற்செய்தி பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி சிவகங்கை ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை குமார்ராஜா, உதவி பங்குதந்தை சைமன்ஆல்டஸ், களப்பணியாளர் ஆல்ட்ரின் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை