பதற்றம் வேண்டாம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நான்காவது அலை துவங்கிவிட்டதோ, மீண்டும் ஊரடங்கு வந்துவிடுமோ என்ற அச்சம் நாட்டு மக்கள் மனதில் தோன்றியுள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவிலும்,  2020 ஜனவரி இறுதியில் இந்தியாவிலும் கால்பதித்த இல்லையில்லை வேர்பதித்த கொரோனா வைரசை அடியோடு ஒழிக்க முடியாது என்ற உண்மை மனிதனுக்கு புரிய சிறிது கால தாமதம் ஆகிவிட்டது. கண்ணை கட்டி காட்டில் விட்டவர்கள் போல் இந்த வைரஸ் பற்றிய எந்த புரிதலுமின்றி, அதை சமாளிக்க வழி தெரியாமல் முதல் அலையில் மனித குலம் சிக்கி சீரழிந்தது. தொற்று பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒரு பக்கம் இருக்க, உலகெங்கும் பல்வேறு நாட்டு அரசுகள் அறிவித்த தீவிர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் நாடுகளுக்கும் தனி மனிதனுக்கும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் பலமடங்கு அதிகம்.பிறகு தடுப்பூசியும் வந்தது, கட்டுப்பாடுகள் நீங்கியது. ஓரளவு நிம்மதி பெருமூச்சுவிட்டபோது வந்தது இரண்டாவது அலை. மீண்டும்  கட்டுப்பாடுகள். இந்தியாவில் இந்த முறை பாதிப்பு அதிகம். பிறகு வந்த மூன்றாவது அலை  பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்பு குறைந்தது. 4-4-2020 அன்று மிகக் குறைவாக 975 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியானது. அதன் பிறகு, கொரோனா தொற்று அதிகரித்து தற்போது தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டி உள்ளது. இதனால், மீண்டும் கட்டாய மாஸ்க், தனி மனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பது போன்ற கட்டளைகள் அரசிடம் இருந்து பறந்து வர நான்காவது அலை துவங்கிவிட்டதோ என்ற அச்சத்தை மக்கள் மனதில் உருவாக்கிவிட்டது. கொரோனா வைரசை மனிதரால் அழிப்பது கடினம். இதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதை உணராமல் அசட்டையாக இருந்தால் பாதிப்பு அதிகமாகலாம். முதல் இரண்டு அலைகளின் வீரியம், பாதிப்பு மூன்றாவது அலையில் இல்லை. நான்காவது அலையும் அதை போலவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று தொற்று நோய் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால், வைரஸ் நம் சொல் பேச்சை கேட்குமா? பாதிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கும் அபாயம் உள்ளது. அரசு சொல்லும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தாலே கொரோனா பரவலை கட்டுப்படுத்திவிடலாம். அத்தோடு, தடுப்பூசி போடுவதில் மக்களுக்கு உள்ள சுணக்கத்தை இங்கே குறிப்பிட வேண்டும். கொரோனாதான் இனி வராதே என்ற நம்பிக்கையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதை மக்கள் தவிர்க்க துவங்கினர். இதனால், தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாதோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது. இந்த 2 கோடி பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே அடுத்த அலையை தடுத்துவிடலாம். தடுப்பூசி, முககவசம், தனிமனித இடைவெளி என்ற மூன்று கேடயங்களை பொதுமக்கள் ஏந்தி நின்றால் கொரோனா நான்காம் அலை பற்றி பதற்றம் வேண்டாம்….

Related posts

அவசரம் ஏன்?

நம்பிக்கை நட்சத்திரம்

மீண்டும் ஒரு கேலிக்கூத்து