பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் விரிசல் ரயில் விபத்து தவிர்ப்பு: தகவல் கொடுத்த பெண்ணுக்கு பாராட்டு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து  தகவல் கொடுத்த பெண்ணால், விபத்து தவிர்க்கப்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருத்துறையூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று அதிகாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்ற அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்த மஞ்சு (22) என்ற பெண் பார்த்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார். கடலூர் துறைமுகம் ரயில்வே போலீசார் அங்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது, ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்து, அவ்வழியே அதிகாலை 6.30 மணிக்கு செல்லும் விழுப்புரம்- மயிலாடுத்துறை பயணிகள் ரயில் டிரைவருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அந்த ரயில் கடலூரில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தை சீரமைத்தபின் கடலூரில் இருந்து பயணிகள் ரயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் தகவல் அளித்த மஞ்சுவை ரயில்வே போலீசார் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது எப்படி என போலீசார் விசாரித்து வருகின்றனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி