பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய விஏஓ, உதவியாளர் கைது

திண்டிவனம், ஆக. 6: திண்டிவனம் அருகே பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய விஏஓ, உதவியாளர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் விஏஓவாக தனவேல் (31) என்பவரும், கிராம உதவியாளராக ஏழுமலை என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சிங்கனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் வாங்கி வருவதாக தொடர்ந்து புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பட்டா மாற்றம் செய்ய விஏஓ தனவேல் மற்றும் உதவியாளர் ஏழுமலை ஆகியோரை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது பட்டா மாற்றும் அதிகாரியிடம் நான் பேசிக்கொள்கிறேன், அதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என விஏஓ, கிராம உதவியாளர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து விவசாயி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை விவசாயியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பின்னர் நேற்று மதியம் 2 மணியளவில் விவசாயியிடம் அப்பணத்தை விஏஓ தனவேல் லஞ்சமாக வாங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ், இன்ஸ்பெக்டர்கள் ஈஸ்வரி, அருள்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் விஏஓ தனவேல் மற்றும் கிராம உதவியாளர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது