பட்டா கத்தி, கஞ்சாவுடன் பைக்கில் சுற்றிய 4 பேர் கைது * ராணிப்பேட்டையை சேர்ந்தவர்கள் * செய்யாறு அருகே பரபரப்பு 1 கி.மீ. தூரம் போலீசார் விரட்டி பிடித்தனர்

செய்யாறு, செப்.24: செய்யாறு அருகே பைக்கில் பட்டா கத்தி, கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் 1 கி.மீ. தூரம் விரட்டி பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை புதூர் கூட்ரோடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஒரே பைக்கில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி விசாரிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். இதனால், போலீசார் அவர்களை சுமார் 1 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, அம்பேத்கர் நகரை சேர்ந்த சூர்யா(29), பெரிய கிராமத்தை சேர்ந்த சந்துரு(20), வாலாஜா தாலுகா, பூண்டி கிராமத்தை சேர்ந்த சுந்தர்(19), திருவள்ளூர் மாவட்டம், பாகசாலை கிராமத்தை சேர்ந்த சஞ்சய்(21) என தெரியவந்தது. அவர்கள் ஓட்டி வந்த பைக்கில் சுமார் 20 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பட்டா கத்தி இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா பொட்டலங்களை செய்யாறு அடுத்த மாமண்டூர் கிராமம், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் கஞ்சா வாங்கி வந்ததாகவும், பாதுகாப்புக்காக பட்டா கத்தி வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பாக்கெட், பைக், பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்