பச்சை மிளகாய் விலை கிலோ ₹200ஐ தொட்டது வேலூர் மார்க்கெட்டில் தக்காளியை தொடர்ந்து

வேலூர், ஜூலை 2: வேலூர் மார்க்கெட்டில் தக்காளி, இஞ்சி, பூண்டை தொடர்ந்து பச்சை மிளகாய் நேற்று ஒரு கிலோ ₹200 வரை விற்பனையானது. நாடு முழுவதுமே காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மார்க்கெட்டில் தக்காளி விலை கடந்த 2 நாட்களாக கிலோ ஒன்று ₹100ஐ தொட்டது. வேலூர் மார்க்கெட்டை பொறுத்தவரை தக்காளி, சித்தூர், வி.கோட்டா, கோலார், மதனப்பல்லி வட்டாரங்களில் இருந்து வருகிறது. பொதுவாக வேலூருக்கு நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். தற்போது ஒன்றிரண்டு லாரிகளில் மட்டுமே தக்காளி வரத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் பிற காய்கறிகளை பொறுத்தவரை முள்கத்தரிக்காய் வேலூர் உட்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் வருகிறது.

முள்தவிர மற்ற ரக கத்தரிக்காய்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தக்காளியை தொடர்ந்து வேலூரில் நேற்று பச்சை மிளகாய் ஒரு கிலோ ₹160 முதல் 200 வரை விற்பனையானது. ஏறக்குறைய இதே விலை விகிதத்தில் பூண்டும் விற்பனையானது. அதேபோல் கத்தரிக்காயின் விலையும் ₹100ஐ தொட்டுள்ளது. இஞ்சியும் கிலோ ₹200ஐ தாண்டி ₹210 முதல் 230 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வு குடும்பத்தலைவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுதொடர்பாக வேலூர் காய்கறி வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து பூண்டு மற்றும் இஞ்சி வரத்து பெருமளவு சரிந்துள்ளது. அதேபோல் பச்சை மிளகாய் வரத்து என்பது வேலூருக்கு ஆந்திராவில் இருந்தே உள்ளது. அங்கு பச்சை மிளகாய் விளைச்சல் கடுமையாக சரிந்துள்ளது. விளைச்சல் சரிந்ததால் வரத்தும் குறைந்துள்ளது. நேற்று பச்சை மிளகாய் விலை ₹110 வரை விற்றது. இன்று(நேற்று) ₹200ஐ தொட்டுள்ளது. சில்லரை விற்பனை விலை இன்னும் அதிகமாக இருக்கலாம். இந்த நிலை சில நாட்களுக்கு நீடிக்கும். அதேநேரத்தில் வடமேற்கு பருவமழை கொட்டித்தீர்க்கும் என்பதால் சில நாட்கள் என்பது ஓரிரு மாதங்கள் என்றும் போகலாம்’ என்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை