பச்சைமலையில் கொட்டித் தீர்த்த கனமழை விசுவக்குடி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

 

பெரம்பலூர், ஆக. 12: பச்சை மலை மீது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக விசுவக்குடி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல் வேறு இடங்களில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் தழுதாழை 58 மில்லி மீட்டர், வேப்பந்தட்டை 83 மில்லி மீட்டர், வி.களத்தூர் 50 மில்லி மீட்டர், லெப்பை குடிக்காடு 70 மில்லி மீட்டர், அகரம் சீகூர் 47 மில்லி மீட்டர், பெரம்பலூர் 33 மில்லி மீட்டர், புது வேட்டக்குடி 37 மில்லி மீட்டர், பாடாலூர் 28 மில்லி மீட்டர், செட்டிகுளம் 33 மில்லி மீட்டர், கிருஷ்ணா புரம் 8 மில்லி மீட்டர் என மாவட்ட அளவில் 468 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது இதன் சராசரி அளவு 42.55 மில்லி மீட்டர் ஆகும்.

அதிலும் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக விளங்கிவரும் பச்சை மலை மீது கனமழை கொட்டித் தீர்த்ததால் பச்சை மலையில் இருந்து உற்பத்தி ஆகி வரும் கல்லாற்றிலும் காட்டாற்றிலும் மழைநீர் பெருக்கெடுத்து சென்றது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமாக விளங்கிவரும் விசுவக்குடி கல்லாறு அணைக் கட்டுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து ஒரு வாரத்திற்கு நல்ல மழை பெய்தால் விசுவக்குடி அணைக்கட்டு நிரம்பி சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும். நீர்வள ஆதாரத் துறைமூலம் வெங்கலம் ஏரிக்கான பாசன நீரும் திறந்து விட வாய்ப்புகள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை