பங்குனிபெருவிழாவை முன்னிட்டு அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

கீழ்வேளூர், ஏப்.13: கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து தேரை இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமிகோயிலில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் சுவாமி பங்குனிப் பெருவிழா வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் உற்சவம், அழகிய மணவாள ஐயனார் உற்சவத்துடன் தொடங்கியது. முருகன் சூரனை வதம் செய்ய நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில் வேல்நெடுஞ்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது சூரனை வதம் செய்து அதன் கொலை பாவம் தீர முருகன் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் முன் உள்ள சரவணபொய்கை திருக்குளத்தில் குளித்து அட்சயலிங்க சுவாமியை நோக்கி தவம் இருந்தார்.

அப்போது தீய சக்திகளால் முருகனின் தவம் கலையாத வகையில் காளியம்மன் நான்கு திசை மற்றும் ஆகாயம் என ஐந்து திசையிலும் காவல் காத்ததால் அஞ்சுவட்டத்தம்மன் என பெயர்பெற்றது. இந்த அஞ்சுவட்டத்தம்மன் பங்குனி திருவிழா கடந்த 2ம்தேதி வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் உற்சவம், 3ம்தேதி அழகிய மணவாள ஐயனார் உற்சவத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினம்தோறும் இரவு அஞ்சுவட்டத்தம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்றுகாலை நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு கோயிலில் இருந்து அஞ்சுவட்டத்தம்மன் தேருக்கு எழுந்தருளினார்.

அதைத் தொடர்ந்து நேற்று காலை தேர்திருவிழா (திருத்தேரோட்டம்) நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தாட்கோ தலைவர் மதிவாணன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்திசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்வடக்கு வீதியில் உள்ள அஞ்சுவட்டத்தம்மன் தேரடியில் இருந்து புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி வழியாக மீண்டும் தேரடியை நண்பகல் வந்து சேர்ந்தது. நாளை (14ம் தேதி) விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், கிராமவாசிகள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை