பக்தர்களுக்கு உடற்சோர்வு தவிர்க்க 10 முக்கிய கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் உடற்சோர்வை போக்க, 10 முக்கிய கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். கோயில்களில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உடற்சோர்வு ஏற்படுவதை தவிர்கும் விதமாக, இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் இந்து அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 முக்கிய கோயில்களில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்தை நேற்று சென்னை வடபழனி முருகன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.அந்த வகையில், தலா 40 கிராம் எடையில் பொங்கல், தயிர் சாதம், லட்டு, புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட 4 முதல் 6 வகை பிரசாதம் வடபழனி ஆண்டவர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், திருவரங்கம் அரங்கநாதசாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மருதமலை சுப்பிரமணியசாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சாமி கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என 5 முருகன் கோயில், 3 அம்மன், 1 வைணவ கோயில் (திருவரங்கம்), ஒரு சிவன் கோயிலில் (மதுரை) வழங்கப்பட உள்ளது. பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி இத்திட்டம் தொடங்கியுள்ளது. ‘உண்டி கொடுத்தோரே உயிர் கொடுத்தோர்’ என்பதற்கேற்ப செயல்பாட்டில் உள்ள அன்னதான திட்டங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 112 அறிவிப்பில் 100க்கும் மேல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள 1691 பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். 2023-24ல் மானியக் கோரிக்கையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து அறிவிக்கப்படும். இந்து அறநிலையத்துறையில் 5 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தோருக்கு பணி நியமன ஆணைகள் முதல்வர் மூலம் வழங்கப்பட உள்ளன.இந்து அறநிலையத்துறை கோயில்களில் வழக்கமான நாட்களில் 5 ஆயிரம் பேர், விசேஷ நாட்களில் 10 ஆயிரம் பேர் பிரசாதம் பெறுகின்றனர். முருகன் கோயில்களில் கிருத்திகை நாளில் 25 ஆயிரம் பேர்வரை பிரசாதத்தை பெறுகின்றனர். சுபமுகூர்த்த நாட்களில் கூடுதலாக பெறுகின்றனர். பிரசாத விநியோக கண்காணிப்பு தொடர்பாக பணியாளர்கள் நியமிக்கப்படுவர். பார்த்தசாரதி குளம் பக்தர்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்தது. நடிகை குஷ்பு பார்த்தசாரதி கோயில் குளத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ள அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியதற்கு துறை மூலம் விளக்கமளிக்கப்பட்டு விட்டது. உழவாரப் பணி தொடர்பாக கடந்த ஆட்சியில் முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என்றார்கள், தற்போது அதை சரிசெய்யும் விதமாக ஆன்லைன் மூலம் உழவாரப் பணி தொடர்பாக பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு 25 லட்சம் பக்தர்கள் கூடினர். கோயில் இடங்களில் குடியிருப்போருக்கான மாத வாடகையை முறைப்படுத்தியதால் கடந்த 2 மாதத்தில் இதுவரை இல்லாதளவு ரூ.170 கோடி நிலுவைத் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. பழனி கோயிலில் மாதம் ரூ.5 கோடி வருமானம் வருகிறது. மீனாட்சி அம்மன் கோயில் வீரராகவர் மண்டபம் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான கற்கள் நாமக்கல்லில் இருந்து பெறப்படுகிறது. ரூ.6 கோடியில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.* சிதம்பரம் கோயில் விவகாரத்தில் நியாயமான நடவடிக்கைசிதம்பரம் கோயில் தொடர்பான நீதிபதி உத்தரவு நகல் நேற்று பெறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி புதிய குழு அமைத்து தீர்வு காண உள்ளோம். தீட்சிதர்கள், பக்தர்களுக்கு முரண்பாடு இல்லாமல் நியாயப்படி நடவடிக்கை எடுக்கப்படும். புதிய குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். இந்து அறநிலையத்துறையில் ஏற்கனவே உள்ள சட்டம் வலிமையாக உள்ளது. முறைகேடுகளை கண்டறிய அவற்றில் வழிவகை உள்ளது. எனவே சிதம்பரம் கோயில் தொடர்பாக புதிய சட்டம் தேவையில்லை. குறைகளை சுட்டிக்காட்டினால் நிறைவு செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு