Wednesday, October 2, 2024
Home » நோய் நீக்கும் யோகினி ஏகாதசி!

நோய் நீக்கும் யோகினி ஏகாதசி!

by kannappan

மணிகளின் அற்புதமான நாதம் மனதை மயக்கியது. மிருதங்கம், பேரிகை, வீணை, யாழ் என்ற இசை வாத்தியங்கள் சளைக்காமல் மணியோடு அற்புத நாதம் எழுப்பியது. தங்கமயமான அந்த மாளிகையின் நட்ட நடுவே, நவரத்ன பீடத்தில் ஒரு மாணிக்க லிங்கம் பிரகாசித்தபடி அருளை வாரி வழங்கிக் கொண்டிருந்தது. அதற்கு விமரிசையாக பூஜைகள் செய்து கொண்டிருந்தார், ஒருவர். நல்ல பருமனான தேகம் அவருக்கு. அந்த தேகம் எங்கும் திருநீற்றின் பூச்சு. முகத்தில் சிவ பக்தியின் அசாத்திய பெருக்கு.பூஜை செய்யும் விதத்தில்தான் எத்தனை மிடுக்கு. இதழின் ஓரத்தில் பஞ்சாக்ஷரத்தின் முணுமுணுப்பு. சுற்றி நின்றிருந்த வேதியர்கள் அற்புதமாக செய்யும் ஸ்ரீ ருத்ர பாராயணத்தில் மயங்கியதால் மனதில் ஒரு பூரிப்பு. அப்பப்பா! “தேர்ந்த சிவ பக்தன் என்றால் இப்படித்தான் இருப்பாரோ!” என்று காண்பவரை மலைக்க வைக்கும் பக்தியின் பக்குவம். அருகில் அவரது துணைவியார் பத்ரா (பெயருக்கு ஏற்றார்போல மங்களகரமாக) அவர் செய்யும் பூஜைக்கு உதவி செய்தபடி இருந்தார்.பணம் வந்த போதும் ஈசனை மறவாத மனம் படைத்தவர்தானே உண்மையில் செல்வந்தர்! அந்த வகையில் குபேரனிடத்தில் பணத்திற்கும் பஞ்சமில்லை. ஈசனை மறவாத நல்ல மனதிற்கும் குறைவில்லை. வேளை தவறாமல் ஈசனை வணங்குவதையே தலையாய வேலையாக கொண்டிருந்தார் குபேரன். இருக்காதா பின்னே! உலகிற்குத்தான் அவன் மகேசன்! ஆனால், குபேரனுக்கோ உற்ற தோழனாயிற்றே அந்த பரமன். “ தோழனுமாய் நான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி” என்று பாடிய சுந்தரர்க்கும் மூத்தவர் இல்லையா குபேரன்? “என்ன தவம் செய்தாரோ ஈசனை நண்பனாக பெற”,  என்று மனதில் எழும் வினாவுக்கு கண்கண்ட பதிலாக இருந்தது அவர் செய்யும் அற்புத பூஜை. பெரிய தவம் எதுவும் செய்ய வேண்டாம்! வணங்குவது இரண்டொரு நொடிகளானாலும் முழுமனதாக பக்தியோடு வணங்கினாலே, ஈசனது மனம் இறங்கி விடும் என்று, அவரது பூஜை ஒரு மௌன உபதேசம் செய்து கொண்டிருந்தது.பால், தயிர், வெண்ணெய், நெய், பஞ்சகவ்யம், பஸ்மம், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது என்று வகை வகையாக அபிஷேகங்கள்! சந்தனம், அகில், சாம்பிராணி போட்ட சுத்தமான தூபம், அழகிய வெண்பட்டால் அலங்காரம் என்று மனதை கொள்ளையடிக்கும் காட்சி.  ஒவ்வொன்றையும் பத்ரா அம்மையார் எடுத்துத்தர, அற்புதமாக ஈசனுக்கு (குபேரனால்) சமர்பிக்கப்பட்டது.அடுத்து சாற்ற வேண்டியது புஷ்ப மாலைகள்தான். அதற்காக கையை நீட்டினார் குபேரன். புஷ்பங்களை வாங்குவதற்காக கைகள் மட்டுமே பத்ராவை நாடியது. அவரது கண்ணும் கருத்தும் அந்த ஈசனின் மீதுதான் இருந்தது என்பதற்கு அவரது முகமே சாட்சி. குபேரன் புஷ்பங்களுக்காக கைகளை நீட்டிய அடுத்த நொடி, பத்ரா அம்மையார் சேவகர்களை நோக்கினார். அவர்களது பார்வையை எதிர்க்க சக்தி இல்லாமல் சேவகர்கள் தலையை குனிந்தார்கள். அம்மையாருக்கு ஒன்றும் விளங்க வில்லை.‘‘என்ன ஆனது சொல்லுங்கள்? அதிக நேரமில்லை.’’மெல்ல சேவகர்களிடம்கிசுகிசுத்தாள் பத்ரா!‘‘அம்மா! அது…. வந்து…’’‘‘என்ன ஆனது சொல்லுங்கள்” பத்ரா பர பரத்தாள்.‘‘மானசரோவரத்தில் இருந்து உயர்ந்த ரக நீலோத்பல மலர்களை தினமும் பூஜைக்கு எடுத்து வரும் வேலை ஹேமமாலியினுடையது. அவனை இன்று ஆளையே காணவில்லை தாயே’’ ஒரு வழியாக சொல்லி முடித்தார்கள் சேவகர்கள்.‘‘என்னது…’’ என்றபடி மார்பில் கையை வைத்துக் கொண்டு மலைத்துப் போனாள் பத்ரா! அவளுக்கு இதயமே நின்றுவிட்டதுபோல இருந்தது.பல யுகங்களாக தடைபடாத சிவ பூஜை இன்று தடை பட்டுவிட்டதே என்ற ஏக்கம். ஏக்கம் சோகமாக மாறி கண்களில் கண்ணீராக வெளி வந்தது. கண்களில் கண்ணீர் பொங்க குனிந்து தன் கணவனின் காதின் அருகில் சென்று நடந்ததை சொன்னாள். அவள் சொன்ன செய்தியை கேட்ட அடுத்த நொடி குபேரனின் முகம் வெளிறி விட்டது. கண்கள் தாரை தாரையாக நீர் சொரிய ஆரம்பித்தது.சுகதுக்கங்கள் வாழ்வில் சகஜம். அதனால் ஈசனுக்கு நடக்கும் பூஜை தடைபடக் கூடாது என்று அவனது உள்மனது சொல்லியது. ஏக்கத்தால் கணவன், மனைவி இருவரின் கண்களில் சொரியும் கண்ணீரையே, மலராக ஏற்கும்படி ஈசனை வேண்டி ஒருவழியாக பூஜையை முடித்தார்கள்.பூஜையை முடித்த குபேரன் எதையோ பறிகொடுத்தவன்போல அமர்திருந்தான். வாழ்வில் முதல் முறையாக பூக்கள் இல்லாமல்,  ஒரு புதுமையான பூஜை செய்த கவலை அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.அவனது மனைவி பத்ராவோ இடி கண்ட சர்ப்பம் போல துடிதுடித்துக்கொண்டிருந்தாள். அதைக் கண்டவர்களுக்கு, செல்வம் கொட்டிக் கிடந்தும், சிவபக்தியில் சிறந்து விளங்கும் அவர்களது பக்குவத்தை புகழ்வதா? இல்லை, அவர்களது இந்த நிலைமையை கண்டு பரிதாபப்படுவதா என்று தெரியவில்லைபூஜை முடிந்து பல நாழிகை கழித்து கூடை நிறைய நீலோத்பல மலர்களை தாங்கியபடி தயங்கித் தயங்கி அரண்மனைக்குள் நுழைந்தான் ஹேமமாலி. அரண்மனையே சோகவேடம் பூண்டிருந்தது.அவனைக்கண்ட அனைவரும் அவனை சுட்டுவிடுவதுபோல பார்த்தார்கள். அதைக்கண்ட அவனுக்கு நடந்ததை உணர வெகு நேரமாகவில்லை. தயக்கத்தோடு நடந்து குபேரன் அருகில் வந்தான். கூடையை கீழே வைத்துவிட்டு கைகட்டி வாய்பொத்தி நின்று கொண்டான். குபேரனுக்கு வந்தது யார் என்று தெரிந்துவிட்டது. ஆனால், அவனை ஏறெடுத்து பார்க்கவும் மனம் வரவில்லை. கம்பீரமாக எங்கோ பார்த்தபடியே கேட்டான்.‘‘ஏன் இன்று தக்க நேரத்தில் பூக்கள் பூஜைக்கு வரவில்லை’’‘‘அது வந்து சுவாமி….’’‘‘தயங்காமல் உண்மையை மட்டும் சொல்’’ கோபத்தோடு இடையிட்டான் குபேரன்.‘‘இன்று நீலோத்பல மலரைக் கண்டதும், எனது மனைவி ஸ்வரூபவதியின் கருநீல விழிகள் நினைவுக்கு வந்து விட்டது. ஆகவே விரகத்தால் அவளை நாடி சென்று விட்டேன்…’’ மென்று விழுங்கினான் ஹேமமாலி.‘‘ஓஹோ! விரகத்தால் பரமனையே மறந்துவிட்டாய் அப்படித்தானே’’ ஆத்திரத்தில் பொங்கி எழுந்தான் குபேரன். ஆனால் ஹேமமாலியிடம் தான் பதில் இல்லை. (என்ன பதில் சொல்ல முடியும் அவனால்.) அதை கண்ட குபேரனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வந்தது.“ அடேய் அற்ப மூடனே! காமத்தால் காமாரியை மறந்த மடையனே! எந்த வாலிபத்தாலும், அழகாலும் , பதவியாலும் புத்தி பேதலித்து இருக்கிறாயோ அந்த வாலிபம் உன்னை விட்டு நீங்கட்டும். உன்னை குஷ்ட நோய் வந்து வாட்டட்டும். காமப் பிசாசான உனக்கு, இனி இந்த தேவலோகத்தில் இடமில்லாது போகட்டும். உண்ண உணவும், இருக்க இடமும் இல்லாமல் , பூ லோகத்தில் அலையக்கடவாய்” என்று சாபங்களை மழையைப் போல பொழிந்து விட்டு சரேல் என எழுந்தான் குபேரன். பிறகு நொடி கூட அங்கே நிற்காமல் கிடுகிடு வென்று கம்பீரமாக நடந்து அங்கிருந்து நீங்கினான். அதுவே குபேரனுக்கு ஹேமமாலியை பார்க்கக் கூட பிடிக்கவில்லை என்பதை காட்டியது.இவை நடக்கும் வரை கூட விதி பொறுக்க வில்லை. குபேரன் சாபமிட்ட அடுத்த நொடி , ஹேமமாலி தேவலோகத்தில் இருந்து விழ ஆரம்பித்தான். நேராக பூமியில் ஒரு அடர்ந்த காட்டில் விழுந்தான். உடம்பெங்கும் குஷ்ட நோய் பரவி சீழ் வடிந்து துர்நாற்றம் வீசியது. அந்த நாற்றம் அவனுக்கே குமட்டியது. சீழ்வடியும் உடம்போடு காடெங்கும் தேடித் திரிந்தான் அவன். வேறு எதையும் இல்லை,  உணவையும் இருக்க இடத்தையும் தான். ஆனால் இரண்டும் கிடைக்க வில்லை. குபேரனின் சாபம் அவனை பாடாய் படுத்தியது.போதாத குறைக்கு பசி வயிற்றை கிள்ளியது. உயிரும் போகவில்லை. ஒரே நரக வேதனையாக இருந்தது அவனுக்கு. இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அப்படியே அலைந்து அலைந்து இமய மலைச்சாரலில் இருக்கும் ஒரு அற்புத ஆசிரமத்தை கண்டான் அவன். அதன் வாயிலில் ஒரு தர்பாசனத்தில் அமர்ந்தபடி தவமிருந்தார் மார்கண்டேய மகரிஷி! ஈசன் அருளால் காலனை வென்றவர்! பூமாதேவியை ஒப்பிலா அப்பனுக்கு கட்டிக் கொடுத்து, அந்த பரமனுக்கே மாமன் ஆனவர். அவரது ஞான ஒளியே அவனது கவலையை நீக்கி விட்டதுபோல இருந்தது. மெல்ல தைரியத்தை வர வைத்துக் கொண்டு அவரது அருகில் சென்று பாதத்தில் விழுந்தான், அவன்.  அவனது இந்தச் செயலால் தவம் கலைந்த மகரிஷி அவனை நோக்கினார். அவனது நிலை, அவருள் கருணையை ஊற்றெடுக்க வைத்தது.  தனது மலர் கரத்தால் அவனை தொட்டு, தூக்கினார். ஆதரவாக அமரவைத்து, தாகம் தீர நீர் கொடுத்து இளைப்பாற்றினார். பிறகு மெல்ல, அவன் யார் என்ன என்பதை விசாரித்தார். அவனும் நடந்ததை ஒன்றும் விடாமல் சொன்னான். சொல்லி முடித்தவன் வேதனையால் கேவிக்கொண்டே, ‘‘எனக்கு இனி ஒரே புகல் நீங்கள் தான் சுவாமி,  என்னை காத்தருளுங்கள்’’ என்று அவரது பாதத்தை பிடித்து மன்றாடினான். மீண்டும் வாஞ்சையோடு அவனை எழுப்பிய முனிவர் மெல்ல கருணையோடு பேச ஆரம்பித்தார்.‘‘அப்பனே! நாளை யோகினி ஏகாதசி! ஆஷாட மாதத்து கிருஷ்ண பட்சத்தில் வரும் புனிதமான ஏகாதசி! அன்று, அகமும் புறமும் தூய்மையோடு அந்த மாலவனை விரதமிருந்து வணங்கு. உனது பாவம் அனைத்தும் நீங்கி உயர்ந்த நற்கதி கிடைக்கும்.” மெல்ல மொழிந்து விட்டு வாஞ்சையோடுஹேமமாலியை நோக்கினார் முனிவர்.‘‘அந்த விரதம் கடைபிடிக்கும் முறை என்ன சுவாமி!” கேட்டது ஹேமமாலி தான்.‘‘ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் இருப்பது ஒரு வகை. நீராகாரங்களை மட்டுமே அருந்தி விரதம் இருப்பது ஒரு வகை. பழங்களை மட்டும் உண்பது மற்றொரு வகை. உப்பு சேர்க்காமல், தானியங்களை உடைத்து (சிற்றுண்டியாக) உண்பது ஒரு வகை. அரிசியை மட்டும் சேர்க்காமல் உணவு அருந்துவது மற்றொரு வகை. இவை ஐந்துள் முதலில் சொன்ன வகையே சிறந்தது. அதாவது ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பதே சிறந்தது.’’ பொறுமையாக பதில் உரைத்தார் முனிவர்.‘‘யோகினி ஏகாதசியின் பயன்கள் என்ன சுவாமி’’‘‘ஒருமுறை யோகினி ஏகாதசி அன்று விரதம் இருந்தால், எண்பத்தி எட்டாயிரம் மாலவன்அடியவர்களுக்கு, உணவிட்ட பலன் உண்டு மகனே! யோகினி ஏகாதசி உனது பாவங்களையும், நோய்களையும் தீர்த்து உன்னை உயர்ந்த நற்கதியில் சேர்க்கும் புரிகிறதா’’ என்றபடி முனிவர் தனது வலது கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.ஹேமமாலி, மார்கண்டேய முனிவர் சொன்ன படி விரதம் இருந்து, நோயும் பாவமும் நீங்கப் பெற்று,  உயர்ந்த நற்கதி அடைந்ததை பிரம்ம வைவர்த்த புராணம் வெகு அழகாக விளக்குகிறது. இந்த சரிதத்தை ஒரு முறை படித்தலோ அல்லது கேட்டாலோ அனைத்து பாவங்களும் நீங்கி மாலவன் அருள் சேரும் என்று அந்த புராணம் ஆணித்தரமாக சொல்கிறது. இப்படி மகிமைகள் அநேகம் உள்ள யோகினி ஏகாதசி அன்று (ஜூன் பதினேழு) விரதம் இருந்து நற்கதி பெறலாமா?ஜி.மகேஷ்…

You may also like

Leave a Comment

eighteen − sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi