நெல்லை தொகுதிக்கு நடக்கும் குடுமிப்பிடி: பாஜவுக்கு போட்டியாக களமிறங்கிய அதிமுக: சமூகவலைதளத்தில் ஆதரவு திரட்டுகிறது

நெல்லை தொகுதியில் அதிமுகவும், திமுகவும் தான் மாறி, மாறி போட்டியிட்டு வந்துள்ளன. அந்த வகையில் நெல்லை தொகுதியில் கடந்த 2001, 2006, 2011, 2016 ஆகிய 4 தேர்தல்களில் அதிமுக சார்பில் களம் கண்டவர் நயினார் நாகேந்திரன். இதில் 2001, 2011 ஆகிய இரு தேர்தல்களில் மற்றும் வெற்றி பெற்றார். 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் மாலைராஜா, 2016ல் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லெட்சுமணன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் உள்ளார். அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சி மாறினாலும், தொகுதியை விட்டுத் தர நயினாருக்கு மனது இல்லை. எப்படியாவது பாஜ தலைமையின் மூலம் நெல்லை தொகுதியை கேட்டுப் பெற்று இந்த முறை களத்தில் குதிக்க வேண்டும் என நயினார் ஒற்றைக் காலில் நிற்கிறார். இதற்காக அவர் பாஜ தலைவர் எல்.முருகனை நெல்லை அழைத்து வந்து பைக் பேரணி நடத்தினார். அன்றே நெல்லை சந்திப்பில் உள்ள தனது ஓட்டலிலும் தேர்தல் அலுவலகத்தை எல்.முருகன் மூலம் திறக்க ஏற்பாடு செய்திருந்தார். இதன் மூலம் நான் தான் இந்தத் தொகுதியில் நிற்கப் போகிறேன் என்பதை சொல்லாமல் செய்தார் நயினார் நாகேந்திரன். நயினாரின் இந்த பிரவேசத்திற்கு அதிமுகவிடம் இருந்து ஆரம்பத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. ஆனால் பாஜகவுடன் தொகுதி பங்கீடு முடிந்து, அடுத்த கட்டமாக தொகுதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நயினாருக்கு போட்டியாக, அதிமுகவும் களத்தில் குதித்துள்ளது. நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜாவுக்கு தான் நெல்லை தொகுதி என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் அவரது படத்தை வெளியிட்டு பிரசாரம் களை கட்டியுள்ளது. இதன் மூலம் காலம், காலமாக அதிமுக போட்டியிட்டு வரும் நெல்லை தொகுதியை பாஜகவிற்கு விட்டுத் தர நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவிற்கு உணர்த்தும் வகையிலேயே இந்த சமூக வலைதள பிரசாரம் நடந்து வருகிறது. வேட்பாளர் பெயர் அறிவிக்கும் முன்பே ஒரே தொகுதிக்கு கூட்டணி கட்சியும், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியும் மோதி வருவதால் நெல்லை தொகுதி அரசியல், களத்தை கலக்கி வருகிறது. …

Related posts

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்

மக்களவையில் ஆவேச பேச்சு; ராகுல் காந்தி மீது நடவடிக்கை?: ஒன்றிய அமைச்சர் கருத்தால் பரபரப்பு

வெளிநடப்பு விவகாரத்தில் இந்தியா கூட்டணிக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு: பாஜ பக்கம் சாய்ந்தது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்