நெல்லை உள்பட 10 தாலுகாக்களில் செப்.9ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

நெல்லை, செப்.6: நெல்லை உள்பட 10 தாலுகாக்களில் வரும் 9ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சமரச பேச்சு வார்த்தைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது; 2023ம் ஆண்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 9ம்தேதி உச்ச நீதிமன்றம் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை நடத்த தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இதனடிப்படையில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆலோசனையின்படி 2023ம் ஆண்டின் 3வது தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 9ம்தேதி நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் நெல்லை உள்பட 10 தாலுகா நீதிமன்றங்களில் நடக்கிறது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படாத முன் வழக்குகளாகிய வங்கி கடன் வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இவ்வழக்குகள் நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வரும் 9ம்தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சந்திரா வழக்கு விசாரணையை துவக்கி வைக்கிறார். எனவே பொதுமக்கள் தங்கள் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பின் அதனை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமூகமான முறையில் தீர்வுகாணலாம் என மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை