நெல்லிக்குப்பம் ஊராட்சியில் காட்டு பங்களாவாக காட்சியளிக்கும் ஒன்றிய அரசு மருத்துவமனை

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய அரசு மருத்துவமனை, முறையாக பயன்படுத்தாமல் மூடப்பட்டுள்ளதால், சினிமாவில் வரும் காட்டு பங்களாவை போல் காட்சியளிக்கிறது. திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 2500 வாக்காளர்களும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் வசிக்கின்றனர். இதில், நெல்லிக்குப்பத்தை சுற்றி கீழூர், தர்மாபுரி, கொட்டமேடு, கொண்டங்கி, மேலையூர், நந்தம்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. கடந்த 1965ம் ஆண்டு ஒன்றிய  ரயில்வே அமைச்சராக ஓ.வி.அளகேசன் இருந்தபோது நெல்லிக்குப்பம் ஊராட்சியில், ஒன்றிய மருத்துவமனையை தொடங்கினார். போதிய போக்குவரத்து வசதியும் மருத்துவ வசதியும் இல்லாத காலகட்டத்தில் தொடங்கப்பட்டதால் இந்த மருத்துவமனை நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. இங்கு, போதிய மருந்துகள் இல்லாத நிலையிலும் இந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டு வந்தது.மேலும், இந்த மருத்துவமனை சுகாதாரத் துறையின் கீழ் செயல்படாமல், ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வந்ததால் ஊராட்சியில் நிதி ஆதாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த மருத்துவமனை மூடப்பட்டது. இதை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக பூட்டிக் கிடப்பதால் மருத்துவமனை வளாகம் முழுவதும் முட்செடிகளும், புதர்களும் வளர்ந்து சினிமாவில் வரும் காட்டு பங்களாவை போல் காட்சியளிக்கிறது. மேலும், கட்டிடத்தின் பல இடங்களில் விரிசல் விட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் அச்சுறுத்துகிறது. எனவே, சுகாதாரத்துறை சார்பில் நெல்லிக்குப்பம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் அல்லது ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் செயல்பட்டு, தற்போது மூடப்பட்ட கிடக்கும் இந்த ஒன்றிய மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

நீட் விலக்கு ஏன் தேவை? விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு 4 முறை கடிதம்!

ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும் : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

கறுப்புப் பணத்தை ஒழிக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் என கூறும்போது சிரிப்பு வரவில்லையா?: வானதி சீனிவாசனுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்