நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்-வியாபாரிகள் வலியுறுத்தல்

நெல்லிக்குப்பம் : காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வாரச்சந்தைகளில் ஒன்றானது காராமணிகுப்பம் வாரச்சந்தை. இந்த வாரச்சந்தை திங்கள் கிழமை நடைபெறும். இந்த சந்தைக்கு பல்வேறு வெளியூர்களில் இருந்து காய்கறிகள் மற்றும் கருவாடு, ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் விற்பனை செய்யப்படுகிறது.வெளிக் கடைகளை விட இந்த சந்தையில் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் நெல்லிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்களும் இந்த வாரச்சந்தைக்கு வந்து காய்கறிகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கருவாடு பிரியர்கள் இந்த சந்தையிலிருந்து அதிக அளவில் கருவாடு வாங்கி செல்வதும் வழக்கம். இந்த வாரச்சந்தையில் கடைக்காரரிடம் வரி வசூல் செய்ய ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் இந்து அறநிலைய துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டு 8 லட்சத்துக்கு வாரச்சந்தை ஏலம் போனது தெரிய வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல லட்சத்துக்கு மேல் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டு வருமானத்தை ஈட்டி வரும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் சந்தை நடக்கும் இடத்தில் விற்பனையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித வசதியும் செய்து தரவில்லை. தானே புயலின்போது அங்கிருந்த மரங்கள் விழுந்ததால் வெறிச்சோடி உள்ளது. காய்கறி விற்பனையாளர்கள் வெயிலிலும், மழையிலும் அமர்ந்து காய்கறிகள் விற்பனை செய்து வருகின்றனர். சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் குடிக்க குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை. சாலை மற்றும் கழிவறை வசதியும் இந்த சந்தையில் இல்லாததால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.பொதுமக்களின் நலன் கருதி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காராமணிக்குப்பம் வாரச்சந்தையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்