நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடி கைது

 

பூந்தமல்லி, டிச. 12: நெற்குன்றம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய ரவுடியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து பணம், செல்போனை பறிமுதல் செய்தனர்.
நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (39). அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், முத்துமாரியம்மன் கோயிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ₹25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயம்பேடு உதவி ஆணையர் அருண் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் இருவர் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் புகுந்து உண்டியலின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் செல்லும் காட்சி தெரியவந்தது. விசாரணையில்ல நெற்குன்றம் மேட்டுகுப்பம் பகுதியைச் சேர்ந்த விக்கி (22) என்பதும், இவர் மீது பல காவல் நிலையங்களில் கஞ்சா, செல்போன் மற்றும் செயின் பறிப்பு, வழிப்பறி உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவரது கூட்டாளியான 17 வயது சிறுவனும் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், திருட்டு விக்கி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடமிருந்து ₹21 ஆயிரம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை புழல் சிறையில் அடைத்தனர். இதில் அவரது கூட்டாளியான 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை