நெருங்குது தைப்பூசம் பழநிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுமா?..பக்தர்கள் எதிர்பார்ப்பு

பழநி: தைப்பூச திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழநி வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இவர்களில் பெரும்பாலானோர் பாதயாத்திரையாக வருவதால் ஊர் திரும்புவதற்கு பஸ்களை அதிகளவு பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. ஆனால், அரசு பஸ்களில் கட்டணங்கள் வசூலிப்பது முறைப்படுத்துவது இல்லை. வழக்கத்தை விட கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பக்தர்களும் வேறு வழியின்றி பஸ்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.உதாரணமாக பழநியில் இருந்து கோவைக்கு அரசு பஸ்களில் சாதாரண நாட்களிலேயே ரூ.95க்கு மேல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தைப்பூச காலங்களில் மேலும் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணம் ரூ.25 மட்டுமே ஆகும். இதுபோல் மதுரை, நெல்லை, கோவில்பட்டி உள்ளிட்ட பிற ஊர்களுக்கும் ரயில்களில் வசூலிக்கப்படும் பயணக் கட்டணம் மிகவும் குறைவு. எனவே, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.ஆனால், பழநியில் இருந்து பிற ஊர்களுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை. மேலும், தற்போது கொரோனா காரணமாக பல ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன.  பழநி வரை இயக்கப்பட்டு வந்த சில ரயில்களும் பாலக்காடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. எனவே, திருவிழா காலங்களில் மட்டுமாவது சிறப்பு ரயில்கள் பழநி வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டுமென பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து பழநியை சேர்ந்த ரயில் பயன்படுத்துவோர் சங்க தலைவர் முருகானந்தம் கூறுகையில், பழநியில் இருந்து திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தன. அதுபோல் பழநியில் இருந்து திண்டுக்கல், சேலம் வழியாக சென்னை சென்ட்ரலுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த 2 ரயில்களுமே தற்போது பாலக்காடு வரை நீட்டிப்பு செய்யப்பட்டு விட்டது. தற்போது இந்த ரயில்களால் கேரள மக்கள் மட்டுமே பயன்பெறும் சூழல் நிலவுகிறது. கொரோனாவை காரணம் காட்டி திருச்செந்தூர் மற்றும் மதுரை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. தைப்பூச திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பழநி நகருக்கு வருவர். இவர்கள் ஊர் திரும்புவதற்கு வசதியாக கோவை, மதுரை, காரைக்குடி, திருச்சி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு திருவிழா நடைபெறும் நாட்களில் தினசரி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்றார்….

Related posts

டிராக்டர் மோதி விபத்து: பெண் பொறியாளர் பலி

ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் குல்காம் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் 5வது முறையாக மீண்டும் வெற்றி!!

காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் மழை..!!