நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்து அளிக்கும் ‘ஜெகரண்டா’

 

ஊட்டி, மார்ச் 8: நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்களில் பூத்துள்ள ஜெகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து விருந்தளித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் சில பூக்கள் மட்டும் மலரும். இதில், சாலையோரங்களில் பூக்கும் ஜெகரண்டா, பிளேம் ஆப் தி பாரஸ்ட் போன்ற மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

இந்த மலர்கள் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பூக்கத் துவங்கி மே மாதம் வரை காணப்படும். தற்போது இந்த மலர்கள் ஊட்டி – கோவை சாலையில் மரப்பாலம் முதல் பர்லியார் வரையிலும், ஊட்டி – மஞ்சூர் சாலையில் பல்வேறு பகுதிகளிலும், ஊட்டி – கோத்தகிரி சாலை, மசினகுடி சாலை என பல்வேறு இடங்களிலும் பூக்கத் துவங்கியுள்ளது.

அதேபோல், மசினகுடி, முதுமலை, தெப்பக்காடு, சிறியூர், பொக்காபுரம், மாயார் போன்ற பகுதிகளில் தற்போது பிளேம் ஆப் தி பாரஸ்ட் மலர்களும் தற்போது பூத்துள்ளன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சி, ரோஜா காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிக்கு தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், மலர்கள் இல்லாமல் பச்சை நிறச்செடிகள் மட்டுமே காணப்படுகிறது.  இதனால், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இது போன்று சாலையோரத்தில் உள்ள மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த மரங்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’