நீட்டை ரத்து செய்ய சட்ட நடவடிக்கை ஆகஸ்ட்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்வதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் மாதம் தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற ஜூலை 31ம் தேதி தான் சிபிஎஸ்சி ப்ளஸ் 2  தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்படுகின்றன. அதேபோல் மாநில கல்வி முறையில்  படித்த பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடும் பணி  நடைபெற்றுவருகிறது. எனவே பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணியானது ஜூலை 31ம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டுவிடும்.எனவே, ஆகஸ்ட் மாதம் முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.  தனியார் கல்லூரிகளில் இப்போதே மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருப்பதாக தெரியவருகின்றன. அதுகூடாது. ப்ளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிட்டப்பிறகு தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.  9ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கு கடந்த 2 தினங்களாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுவருகிறது. பொறியியல் படிப்புகளுக்கு வழக்கமான நடைமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான அனைத்து சலுகைகளும் தொடரும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொண்டுவருகிறார். எம்.பில் முதுகலை பட்டப்படிப்பு குறித்து  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவேறு கருத்துகளை கொண்டுள்ளனர். சென்னை பல்கலைகழகத்தில் எம்.பில் படிப்புகள் ரத்து செய்யப்பட்டதற்கும் புதிய கல்வி கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை. எம்.பில் வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைகழகங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்பது தான் முதல்வரின் நிலைப்பாடு. இது குறித்து துணைவேந்தர்களை நியமிக்கும் கமிட்டியில் அரசு வலியுறுத்தும். இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு