நிலங்களை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

 

மதுரை, ஜூன் 28: நிலங்களை அளவீடு செய்தல், அத்துமால் அறிதல் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கூறியுள்ளார். மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சரால் கடந்த 20.11.2023ல் அத்துமால் மனுக்கள் இணைய வழிப்படுத்தும் திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் தொடர்பான அத்துமால் மனுக்களை, நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இதுதொடர்பாக, https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நிலஅளவை கட்டணம் உள்ளிட்டவற்றை வங்கிகளுக்கு செல்லாமல், இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும்.

மேலும், நிலஅளவை செய்யப்பட்ட பின், மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை மற்றும் வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே, தமிழக அரசு ெசயல்படுத்தும் இந்த சேவையை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை