நியூயார்க் டைம்ஸ் செய்தியால் மீண்டும் வெடித்தது சர்ச்சை பெகாசஸை இந்தியா வாங்கியது உண்மை: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

புதுடெல்லி: இந்தியா, இஸ்ரேல் இடையே கடந்த 2017ம் ஆண்டு, ரூ.15,000 கோடி மதிப்பிலான, அதிநவீன ஆயுதங்கள், உளவுப்பிரிவு கருவிகள் வாங்கிய ஒப்பந்தத்தின் மையப் பொருளாக பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்ததாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதனையடுத்து, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளதால் இப்பிரச்சனை மீண்டும் பூதாகரமாகி உள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளைக் கொண்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நீதிபதிகள், அரசு உயரதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்டது. இந்தியாவிலும் ராகுல் காந்தி, அவருக்கு நெருங்கிய 5 தலைவர்கள், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, ஊடகவியலாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என 300க்கும் மேற்பட்டோரது தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ஒன்றிய அரசு மறுத்தது. இந்நிலையில், இந்தியா, இஸ்ரேல் இடையேயான 2017ம் ஆண்டு ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்தின் மையப் பொருளாக பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நாளை ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், இது பெரும் சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், `உலகின் மிக சக்திவாய்ந்த இணைய ஆயுதத்துக்கானப் போர்’ என்ற தலைப்பில் வெளியான செய்தியில், `கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி இஸ்ரேல் சென்ற போது, அங்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் என்று மிக பெரிய அளவில் விவரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக, பாலஸ்தீன நாட்டினை காக்கும் நோக்கத்தின் அர்ப்பணிப்புக்காக, இந்தியா இஸ்ரேலுடன் கடுமையான நிலைபாட்டை கொண்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் இஸ்ரேல் வருகை, இரு பிரதமர்களும் வெறுங்கால்களுடன் கடற்கரையில் நடப்பது, நட்பு பாராட்டுவது என்ற கோணத்தில் மிக கவனமாக அரங்கேற்றப்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.மேலும், `இரு நாடுகளுக்கு இடையே ரூ.15,000 ஆயிரம் கோடியில் நவீன ஆயுதங்கள், உளவுக் கருவிகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் பெகாசஸ் மென்பொருளும் அடங்கும். சில மாதங்களுக்கு பின், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இந்தியா வருகை தந்தார். இதன் பிறகு, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்புக்கு பார்வையாளர் அந்தஸ்து கிடைப்பதற்கு எதிராக வாக்களித்தது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் இந்த பிரச்சனை கையிலெடுத்து, ஒன்றிய அரசை விமர்சித்துள்ளது. ‘ஒன்றிய அரசு ஜனநாயகத்தை புதைத்து, நாடாளுமன்றத்தை ஏமாற்றி, உச்ச நீதிமன்றத்தையும் தவறாக வழி நடத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வேண்டுமென்று தெரிந்து நீதிமன்றத்தை ஏமாற்றிய மோடி தலைமையிலான அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தி உள்ளார்.மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டரில், “மோடி அரசு ஏன் இந்தியாவின் எதிரி போல் செயல்படுகிறது? தன் நாட்டின் குடிமக்களுக்கு எதிராக போர் ஆயுதத்தை பயன்படுத்தியது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். பாஜ எம்பி சுப்பிரமணிய சுவாமி, “மோடி அரசு நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்த செய்தி தவறு என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக மக்களின் வரி பணத்தில் இருந்து ரூ.300 கோடி தவணைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது,’’ என்று கூறியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளைத் தொடங்கவிருக்கும் நிலையில், பெகாசஸ் விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையிலெடுத்திருப்பது, நாடாளுமன்றத்தில் பெரும் புயலாக உருமாறும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.* ‘எதுவும் கூற முடியாது’பெகாசஸ் உளவு மென்பொருகள் விவகாரம் ஏற்கனவே உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர் வி. ரவீந்திரன் கண்காணிப்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. எனவே, அதுவரை இது குறித்து எதுவும் கூற முடியாது என்று ஒன்றிய அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.* மோடி அரசின் தேசத்துரோகம்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “மோடி அரசு பெகாசஸ் உளவு மென்பொருளை நாட்டின் முக்கியமான ஜனநாயக அமைப்புகள், அரசியல் தலைவர்கள், பிரபலமானவர்களை உளவு பார்க்க வாங்கியுள்ளது. இதற்கு அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பாதுகாப்பு படையினர், நீதித்துறையினர் இலக்காகி உள்ளனர். இது மோடி அரசு செய்துள்ள தேசத்துரோகம் ஆகும்,’’ என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “இந்த உளவு மென்பொருளை மோடி அரசு எதற்காக வாங்கியது, இதனை பயன்படுத்த யார் ஒப்புதல் அளித்தது? யாரெல்லாம் ஒட்டு கேட்கப்பட்டார்கள்? அந்த அறிக்கைகள் யாரிடம் சமர்ப்பிக்கப்பட்டன? என்பவை குறித்து பிரமாண பத்திரத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும். மவுனமாக இருப்பது குற்றத்தை ஒப்பு கொள்வதாகும்,’’ என்று தெரிவித்தார்.* கட்டுக்கதைஒன்றிய சாலை போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங், “நியூயார்க் டைம்ஸ் நாளிதழை நம்ப முடியுமா? வாய்க்கு வந்த கட்டுக்கதையை அவிழ்த்து விடுவதில் அவர்கள் பெயர் பெற்றவர்கள்,’’ என்று கூறினார். இந்தியாவுக்கான ஐநா.வின் முன்னாள் நிரந்தர தூதர் சையது அக்பருதீன் தனது டிவிட்டரில், “பெகாசஸ் உளவு மென்பொருள் ஒப்பந்தத்துக்கு பிறகு உறவின் ஆழத்தை வெளிப்படுத்த, ஐநா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது என்று கூறுவது முற்றிலும் அபத்தமானது,’’ என்று தெரிவித்தார்….

Related posts

ஈரானுக்கு அவசியமில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன்: ராகுல்காந்தி அஞ்சலி

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!