நியூயார்க்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு :10 பேர் சுடப்பட்டனர்; 29 பேர் படுகாயம்!!

வாஷிங்டன் : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்லின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுடப்பட்டனர். 29 பேர் படுகாயம் அடைந்தனர். பரபரப்பான சன்செட் பார்க் மெட்ரோ ரயில் சுரங்கபாதையில் காலை 8.20 மணிக்கு பதைபதைக்க வைக்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மன்ஹாட்டன் நகர் நோக்கி செல்லும் ரயில் சுரங்கப்பாதைக்கு வருவதற்கு சில நொடிகள் முன்னதாக கட்டுமான பணியாளர்கள் அணியும் கவச உடையும் முகமூடியும் அணிந்த மர்ம நபர் திடீரென்று புகை குண்டை வீசியுள்ளார். இதனால் ரயில் பெட்டி புகையால் சூழவே சுரங்கப் பாதையில் ரயில் நின்றதும் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுடப்பட்டனர். ரயிலில் இருந்து அச்சத்தின் பிடியில் மக்கள் வெளியேறி ஓடிய போது, நெரிசலில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் குண்டடிபட்டவர்களின் ரத்தமும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களும் சுரங்கப்பாதையை போர்க்களமாக மாற்றியதில் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்ததை அடுத்து சுரங்கப்பாதையில் இருந்து சுமார் 4 மைல் தொலைவிற்கு போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதற்கிடையே மர்ம நபரின் உருவப்படத்தை கொண்டு விசாரணை நடத்தியதில் அவர் பயன்படுத்தியதாக அறியப்படும் வேன் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். சுரங்கப் பாதையில் கை துப்பாக்கி, க்ரெடிட் கார்ட் என பல புகை வெளியிடும் சாதனங்களையும் கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய போது, கை துப்பாக்கி பழுதானதால் சுடுவதை நிறுத்தி இருக்கலாம் என்றும் ஆயுதம் மற்றும் வெடிப் பொருட்கள் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு பயங்கரவாதிகளின் தொடர்பு இல்லை என்று கூறி இருக்கும் நியூயார்க் காவல்துறை துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை என்றும் மர்ம நபரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  …

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்