நிபுணர்கள் குழு பரிந்துரை செய்தால் 5-15 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி: ஒன்றிய அமைச்சர் மாண்டவியா உறுதி

காந்தி நகர்: ‘நிபுணர்கள் குழு பரிந்துரைத்தால், 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு வெளியிடும்,’ என்று ஒன்றிய சுகாதார அமைச்சர் மாண்டவியா தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி செலுத்தும் பணியை ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. 15-18 வயது சிறுவர்கள், 18 முதல் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பல்வேறு பிரிவுகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது, முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், குஜராத் மாநிலம், காந்தி நகரில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று அளித்த பேட்டி வருமாறு: நாட்டில் 5 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து நிபுணர்கள் குழு இதுவரை எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எப்போது தடுப்பூசி போடுவது, எந்த வயதினருக்கு தடுப்பூசி போடுவது என்பது விஞ்ஞானிகள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வயதினருக்கு தடுப்பூசி போடுவது பற்றி அரசுக்கு இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும். இது அரசியல் முடிவு அல்ல. போதுமான தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. நாட்டில் 67 சதவீத சிறுவர்களுக்கு ஏற்கனவே கொரோனா எதிர்சக்தி உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

லக்னோவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை: செல்போன் சிக்னல், சிசிடிவியை வைத்து துப்பு துலங்கிய போலீஸ்

திருப்பதி லட்டு சர்ச்சை: எஸ்.ஐ.டி. விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்

வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் ஒன்றிய அரசு தகவல்