நிதி வழங்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது இயற்கை பேரிடருக்கு கூட: அமைச்சர் பேச்சு

சிவகங்கை, ஜூலை 31: சிவகங்கையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 73 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66,80,208 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது: தமிழ்நாடு அரசு அனைவருக்குமான அரசாகும். இங்கு கட்சி வேறுபாடு பார்த்து எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. எல்லாத்துறைகளும் வளர்ச்சி பெற்றால்தான் மாநிலத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. இயற்கை பேரிடரின் போது கூட உதவி செய்யாமல் ஒன்றிய மோடி அரசு வஞ்சிக்கிறது. அதற்காக பழிவாங்கவும், முதல்வர் மீது களங்கத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு மோடி அரசு செயல்படுகிறது. மெட்ரோ ரயில் 2 திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடக்கிறது. இதுபோன்ற செயல்கள் வருந்த தக்கதாகும். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் சேங்கைமாறன், நகர்மன்றத்தலைவர் துரைஆனந்த், துணைத்தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் புஷ்பராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், வீனஸ்ராமநாதன், அயூப்கான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி