நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆன்லைன் விளையாட்டின் வரைவு விதிகள் வெளியீடு: வரும் 17ம் தேதி வரை மக்கள் கருத்து கூறலாம்

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆன்லைன் விளையாட்டுக்கான வரைவு விதிகளை ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் குறித்து வரும் 17ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க தமிழகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் இதற்கான அதிகாரம் அனைத்தையும் பறிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிக்கும் அமைப்பாக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும் என ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வரவேற்பு அளித்தன.இதைத் தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டுக்கான ஒரே மாதிரியான வரைவு விதிகளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வகுத்து நேற்று வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சுய ஒழுங்குமுறை அமைப்பை நியமிக்க வேண்டும். நாட்டின் சூதாட்டம் மற்றும் பந்தயம் தொடர்பான அனைத்து விதிமுறைகளுக்கும், சட்டங்களுக்கும் இணங்குவதை உறுதிபடுத்த வேண்டும். பயனர்கள் அவர்களின் வைப்புத் தொகையை திரும்பப் பெறுதல் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும். குறைதீர்க்கும் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வரும் 17ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடலாம் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறி உள்ளது….

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு