நலவாரிய தலைவர் தகவல் கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்ட பேரவை கூட்டத்தில் சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி பதிவு பெற்றுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு சொந்தமாக வீடு இல்லாமல் இருந்தால் நகர்புறங்களில் நகர்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வீடு வாங்கி கொள்ள ரூ.4 லட்சம் வரை கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படும். கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாதவர்கள், சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் அதில் அவர்களே வீடு கட்டிக் கொள்ள ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். முதல் கட்டமாக ஆண்டிற்கு 10,000 தொழிலாளர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர், மாநகராட்சி ஆணையர், திட்ட அலுவலர், சம்மந்தப்பட்ட செயற்பொறியாளர் (நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) மற்றும் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஆகியோர் கொண்ட குழு மாவட்ட அளவில் பயனாளிகளை தேர்வு செய்து வாரியத்தின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு அனுப்பிவைக்கப்படும். இறுதி ஒப்புதலினை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும்.பயனாளிகளே வீட்டை கட்டிக்கொள்வார்கள். கட்டுமான பணிக்கேற்ப நான்கு கட்டங்களாக பிரித்து இந்த உதவி பணம் தொழிலாளர்களின் வங்கிக்கணக்கிற்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு கட்ட கட்டுமான நிறைவு பணிக்கும் சம்மந்தப்பட்ட பிடிஓ சான்று அளிக்கப்பட வேண்டும். அந்த சான்றின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக பணம் அனுப்பி வைக்கப்படும். இதற்கான அரசு ஆணை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்….

Related posts

துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் உதயநிதி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து: 5 பேர் உயிர் தப்பினர்

10 மாதமாக சம்பளம் நிலுவை தேர்தல் பணியாளர்கள் தவிப்பு