நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் மீட்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கூடுவாஞ்சேரியில் உள்ள மின் வாரியம் அலுவலகம் எதிரே ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 3.99 ஏக்கர் பரப்பளவில் 1988ம் ஆண்டு என்பிஆர் நகர் என்ற பெயரில் வீட்டு மனை அமைக்கப்பட்டது. இங்குள்ள 4 இடங்களில் சுமார் 16,600 சதுரடி (38 சென்ட்) கொண்ட நிலத்தை பேரூராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், இந்த மனை பிரிவை அமைத்தவர் நிலத்தை பேரூராட்சிக்கு வழங்காமல் அவரே பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், அந்த இடத்தை விற்பனை செய்ய இருப்பதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி, பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ், அந்த இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தை ஒப்படைக்கும்படி சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். தொடர்ந்து, வருவாய்துறை சார்பில் நிலம் அளவீடு செய்து கற்கள் நடப்பட்டன. இதையடுத்து, அந்த நிலங்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.18 கோடி என வருவாய் துறையினர் தெரிவித்தனர். மேலும், பேரூராட்சியில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மொத்தம் 46 பூங்காக்கள் உள்ளன. அதில், அனைத்து பூங்காக்களில் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அவை அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை