நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விழுப்புரம், அக். 2: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை கொல்ல முயன்றவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. விழுப்புரம் அருகே சிறுவள்ளிகுப்பத்தை சேர்ந்தவர் கலியுகன் (32). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நண்பரான மோகன்ராஜ் (எ) பாண்டு என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாம். இதனிடையே கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்ட மோகன்ராஜ், கலியுகனை வழிமறித்து தகராறு செய்துள்ளார். மேலும் சாதி பெயரை சொல்லி திட்டிய மோகன்ராஜ் அவர் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார். படுகாயமடைந்த கலியுகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து அவரது மனைவி அருள்மொழி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மோகன்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் எஸ்சி எஸ்டி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பாக்கியஜோதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்ட்ட மோகன்ராஜிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மோகன்ராஜ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை

செல்போன் பறித்த ரவுடி கைது