நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாத அவகாசம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

திருவனந்தபுரம்: கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு இரவில் காரில் செல்லும் போது வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் டிரைவரான சுனில் குமார் என்பவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை ஒரு பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதன்படி ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் ஒரு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக விசாரணையை முடிக்க 6 மாதம் கால அவகாசம் அளிக்க தனி நீதிபதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து  ஆகஸ்ட் 15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக மேலும் 6 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று தனி நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி கான்வில்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது….

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்