நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் 21 ஆயிரம் குற்றவாளிகளின் பட்டியல் தயார்: குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைது செய்ய போலீசார் முடிவு

சென்னை: நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களில் 21 ஆயிரம் குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. குறிப்பாக சென்னையில் 5 ஆயிரத்து 794  வாக்குச்சாவடி மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என மொத்தம் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு  நடவடிக்கையாக காணொலி காட்சி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் 18 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் 19ம் தேதி நடைபெறுகிறது.  காலை 7 முதல் மாலை 5  மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை  வாக்குப்பதிவு நடைபெறும். அதைத் தொடர்ந்து 22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில் அன்றைய தினம் எந்தவிதமான அசம்பாவிதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்க கூறியதையடுத்து சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் முக்கிய குற்றவாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை முன்னச்சரிக்கையாக கைது செய்து சிறையிலும் அடைத்துள்ளனர். மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் ஆட்களை வைத்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதா என்று தலைமறைவாக உள்ளவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் பட்டியலில் 4,481 பேரும், தமிழகம் முழுவதும் 21,187 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் எந்தவிதமான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் திருந்தி வாழ்வதாக கூறினால் அவர்களிடம் நன்னடத்தை சான்றிதழ்கள் பெற்று அவர்களிடம் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 107, 109, 110 ஆகியவற்றின் கீழ் கையெழுத்து பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.எனவே வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 22ம் தேதிகளில் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்