நகராட்சிக்கு வரி, வாடகை பாக்கி கொடைக்கானலில் 50 கடைகளுக்கு சீல் வைப்பு-பழநியிலும் கடைகளுக்கு சீல்

பழநி/கொடைக்கானல் : பழநி, கொடைக்கானலில் வாடகை மற்றும் வரி பாக்கி உள்ளதால் நகராட்சி கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.     பழநி நகரின் மையத்தில் வஉசி பஸ் நிலையம் உள்ளது. இங்கு நகராட்சிக்கு சொந்தமாக 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தவிர, ரயில்வே பீடர் சாலை, காந்தி மார்க்கெட் மற்றும் பெரியகடைவீதி பகுதிகளிலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அதிகளவு உள்ளன. இக்கடைகளில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை கடைக்காரர்கள் சரிவர செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாடகை பாக்கித்தொகை ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது. கால அவகாசம் கொடுக்கப்பட்டும் வாடகை செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக நகராட்சி ஆணையர் கமலா உத்தரவின் பேரில் நேற்று வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் ஆய்வாளர் காந்தி, நகராட்சி பொறியாளர் வெற்றிச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையால் வாடகை பாக்கித்தொகை ரூ.2 கோடி அளவிற்கு வசூல் செய்யப்பட்டது.  இதேபோல் கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் நாராயணன் அறிவுறுத்தலின்படி வாடகை பாக்கி வைத்திருக்கும் கடைகளுக்கு   சீல் வைத்தனர். நேற்று கொடைக்கானல் ஏரிசாலை, அப்சர்வேட்டரி சாலை, பிரையன்ட் பூங்கா பகுதிகளில் உள்ள 50 கடைகளுக்கு வருவாய் ஆய்வாளர் பொறுப்பு ரங்கராஜ், நகர்நல அலுவலர் அரவிந்த் மற்றும் அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.இதுபற்றி வருவாய் ஆய்வாளர் கூறுகையில், கொடைக்கானல் நகராட்சிக்கு உள்பட்ட   கடைகள், வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்ட அனைத்து இனங்களிலிருந்தும்   வாடகை பாக்கி உள்ளது. கொடைக்கானல் ஏரி சாலை, பிரையன்ட் பூங்கா பகுதி, அப்சர்வேட்டரி சாலை பகுதிகளில் உள்ள பல கடை உரிமையாளர்கள் வாடகை கட்டாமல் உள்ளனர். பல லட்சம் ரூபாய் அளவிற்கு வாடகை கட்டாமல்  உள்ள  கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாடகை செலுத்தாத  கடைகளை விரைவில் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து வாடகை பாக்கியை செலுத்த வேண்டும். கொடைக்கானல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீர் இணைப்பு வரி, தொழில்வரி, உள்ளிட்டவைகளை விரைவில் செலுத்தி நடவடிக்கைகள் எடுப்பதில் இருந்து தவிர்க்க  வேண்டும் என்றார். …

Related posts

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு; எள்ளு குட்டையில் கட்டப்பட்டிருந்த 34 வீடுகள் இடிப்பு!