தோகைமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டி தந்தை பலி ஆதரவற்ற மகனுக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்கி இலவச கல்வி

மதுரை, டிச. 23: ஜல்லிக்கட்டில் காளை முட்டி தந்தை பலியான நிலையில் ஆதரவற்ற மகனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு, இலவச கல்வி வழங்கப்படுவதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வி.புதுப்பட்டியைச் சேர்ந்த மூக்காயி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டம், தோகைமலையில் கடந்த 16.1.2018ல் நடந்த ஜல்லிக்கட்டை பார்க்க சென்ற என் மகன் தங்கராஜ் மாடு முட்டியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது மனைவியும் பிரிந்து சென்ற நிலையில் எனது 12 வயது பேரனுடன் எந்தவித ஆதரவுமின்றி மிகுந்த சிரமத்தில் உள்ளேன். எனவே, ரூ.25 லட்சம் இழப்பீடு, எனது பேரனுக்கு தரமான கல்வியும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘‘மனுதாரர் வக்கீல் ஜி.டி.மணிகண்டன் ஆஜராகி, மைனர் சிறுவன் எந்தவித ஆதரவுமின்றி உள்ளார். கல்வி கிடைக்காமல் எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிமன்றம், மைனர் சிறுவனின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யவும், அரசு பள்ளியில் இலவச கல்வி வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு சிறப்பு பிளீடர் பர்ஷானா கவுசியா ஆஜராகி, ‘‘ரூ.5 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. விராலிமலை அக்கல்நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. மனுதாரர் பேரனுக்கு இலவச கல்வி கிடைப்பதை புதுக்கோட்டை கலெக்டர் கண்காணித்து உறுதி செய்வார்’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுவை முடித்து வைத்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை