தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதால் மது விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு: பீர் வகைகளுக்கு கிராக்கி

சேலம்: தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளதால் டாஸ்மாக்கில் மது விற்பனை வழக்கத்தை விட  30 சதவீதம் அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளநிலையில், அரசியல் கட்சிகளின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் தேர்தல் பிரசாரம் முடிந்ததும், கட்சி தொண்டர்கள், மது போதையில்  மிதப்பார்கள். இது ஒவ்வொரு தேர்தலிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. தற்போது மது பாட்டில் விற்க கடும் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. ஒரு நபருக்கு 4 குவார்ட்டர் பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் 102 டிகிரிக்குமேல்  வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடும் வெயில் காரணமாக கடந்த சில வாரங்களாக டாஸ்மாக் கடைகளில் பிராந்தி வகைகளைவிட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக நடக்கும் விற்பனையில் இருந்து 20 முதல் 30 சதவீதம் பீர் விற்பனை கூடியுள்ளது. தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ெதாடங்கியுள்ள நிலையில் பிராந்தி வகைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில்,‘‘சேலம் மாவட்டத்தில் 210 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடக்கிறது. வெயில் காரணமாக ஏற்கனவே பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. சட்டமன்ற தேர்தல் எதிரொலியால், தற்போது மது அருந்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட, 30 சதவீதம் விற்பனை கூடியுள்ளது.கடைகளில் இரவு 8 மணிக்கு மேல் விற்பனை அதிகமாக உள்ளது. மற்ற நேரங்களில் சுமரான விற்பனை உள்ளது, என்றனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்