தேர்தல் ஆணையத்திடம் பொய் சொல்லவில்லை: ஒன்றிய சுகாதார அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: நாட்டில் தற்போது நிலவி வரும் கொரோனா சூழல் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தவறான தகவல் அளிக்கப்பட்டதாக வெளியான செய்திகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுகாதார செயலாளர், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் இது பற்றி ஆலோசனை நடத்தியது. இதில், கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தவறான தகவல்களை ஒன்றிய அரசு கூறியிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேர்தல் ஆணையத்துடன் நடந்த ஆலோசனை  கூட்டத்தில், ‘தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நிலவும் கொரோனா சூழல் குறித்து கவலைப்பட தேவையில்லை. நாட்டில் மிகவும் குறைந்த அளவிலேயே ஒமிக்ரான் பாதிப்பு உள்ளது,’ என்று சுகாதார அமைச்சகம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது மிகவும் தவறான செய்தி. தவறாக வழிநடத்தக் கூடியவை, உண்மைக்கு புறம்பானவை. சர்வதேச அளவிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் பரவல் குறித்த விவரங்கள், தேர்தல் ஆணையத்திடம் தெளிவாக தெரிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்தும் விளக்கம் தரப்பட்டது. தொற்று பரவலுக்கு இடையே இது போன்ற தவறான தகவல்களை வெளியிடுவது, தவறமான பிரசாரத்துக்கு வழிவகை செய்வதாக அமைந்துவிடும்,’ என்று கூறப்பட்டுள்ளது….

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது