தேர்தல் அறிக்கையில் முதல்வர் அறிவித்தபடி பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்: தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு ₹1000 வழங்குவார் என அமைச்சர் அன்பரசன் பேசினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 656 கடைகளில் 3,81,875 குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹22,91,25,000 மதிப்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கபடுகிறது. இதையொட்டி, அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, 21 மளிகை பொருட்களைக் கொண்ட தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறோம். பின்னர் மாவட்டம் முழுவதும் படிப்படியாக 3 நாட்களுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் இந்த பொருட்கள் வழங்கப்படும். எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் நிவாரண பொருட்களில் யாருடைய புகைப்படங்களும் இருக்க கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி பொங்கல் தொகுப்பு பைகளில் யாருடைய புகைப்படமும் இடம்பெறாமல் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும்படி அருமையாக தயார் செய்து வழங்கப்படுகிறது. கோவூர் ஊராட்சியில் 15 நாட்களுக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க தினமும் 200 டோக்கன்கள் வீதம் படிப்படியாக வழங்கி, பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ₹1000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆட்சியில் நிதி அனைத்தும் செலவழிக்கப்பட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நிதி நிலைமை சரி செய்யப்பட்டவுடன் பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம், எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், (காஞ்சிபுரம் மண்டலம்) லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைமைலைநகர் நகராட்சி அலுவலக வளாகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். அமைச்சர் .தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, பொங்கல் தொகுப்பை வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது.உலகுக்கே அச்சாணியாக திகழும் உழவு தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டு திருநாளாகவும், உழவுத்தொழிலுக்கு உயிர் ஊட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றும் நன்நாளாகவும், சாதி, மத பேதமற்று நாம் அனைவரும் ஓர் இனம் தமிழனம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.இந்த சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு 2.15 கோடி குடும்பங்களுக்கு ₹296.88 கோடி செலவில் வழங்கப்படும் என, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 626 அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மளிகைப்பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழுகரும்பு சேர்த்து ₹24.70 கோடி செலவில் வழங்கப்படுகிறது என்றார்.தொடர்ந்து, நந்திவரம் கூடுவாஞ்சேரி மற்றும் மறைலைநகர் நகராட்சி பகுதியில் குறைத்தீர் முகாமில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, முதியோர், விதவை, இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெற்றார்.இதில் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் லட்சுமி, தாம்பரம் ஆர்டிஓ அறிவுடைநம்பி, மாவட்ட வழங்கல் அலுவலர் சீதா, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் சா.லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை