Friday, September 20, 2024
Home » தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசு: அள்ளித் தெளித்த அலங்கோலத்தின் அவசரப் புள்ளி ‘அம்மா மினி கிளினிக்’

தேர்தலை மனதில் வைத்து அதிமுக அரசு: அள்ளித் தெளித்த அலங்கோலத்தின் அவசரப் புள்ளி ‘அம்மா மினி கிளினிக்’

by kannappan

சாகும்போது சங்கரா சங்கரா என்பது போல, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்  வரிப்பணத்தை சுரண்டுவதிலேயே கவனமாக இருந்துவிட்டு, ஆட்சி முடிவுக்கு வரும்  நிலையில் அதிமுக அரசு அள்ளித் தெளித்த அலங்கோலத்தின் அவசரப் புள்ளிகளில்  ஒன்று தான் அம்மா மினி கிளினிக்.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது  ஆரம்பித்து இருந்தால் கூட பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால், தேர்தல்  நெருங்குவதை மனதில் வைத்து வாக்கு வேட்டைக்கு உதவுமே என்ற நோக்கில் சில  மாதங்களுக்கு முன்பு தான் தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள்  அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி, 1,400  கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 கிளினிக்குகள் சென்னை மாநகராட்சியிலும்,  200 நகர்ப்புறங்களிலும், 200 நகரும் மினி கிளினிக்குகளாகவும் அமைக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் 2000 மையங்களில்  தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் நியமிக்கப்படுவார்கள். காலை 8.00 மணி முதல் நண்பகல் வரையிலும், பின்னர் மாலை 4.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரையிலும் இந்த மையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில், டிசம்பர் 14ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.  அன்றைய தினம் முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட  கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டன.உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, ரத்த  அழுத்தம், ஹீமோகுளோபின் அளவுகளை இங்கு பரிசோதித்துக் கொள்ளலாம்.  அதிகபட்சம் தலைவலி, காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மருந்து கொடுக்கிறார்கள்.  இதற்கு எதற்கு ஒரு மருத்துவர்?  மாநிலம் முழுவதும் இயங்கும் 1851 ஆரம்ப  சுகாதார நிலையங்களிலேயே தனியாக இந்த வசதிகளை செய்திருக்கலாமே என்ற  கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் மினி கிளினிக்குகள்  தொடங்கி 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இது பொதுமக்களிடம் போதிய  வரவேற்பை பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஆரம்ப சுகாதார  நிலையங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. சென்னையில் மொத்தம் 200  வார்டுகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்  உள்ளன. மேலும் 19 நகர்ப்புற சமுதாய நல மையங்களும் உள்ளது. இதை தவிர்த்து  ஓமந்தூரார், ராஜிவ் காந்தி, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை, பல்நோக்கு  மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளும் உள்ளன. இந்த  மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கான சிகிச்சை வசதிகளும் கிடைத்து  விடுவதால் பொதுமக்கள் இந்த மினி கிளினிக்குகளுக்கு செல்வதில் பெரிதாக ஆர்வம்  காட்டவில்லை. ஜாபர்கான்பேட்டையில் உள்ள அம்மா உணவகம் அருகில் ஒரு மினி  கிளினிக் அமைக்கப்பட்டது. இந்த கிளினிக்கில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில்  தான் சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த மருத்துவமனைக்குதான்  செல்கின்றனர். இதேபோன்று சென்னையின் பிற பகுதிகளிலும் பெரும்பாலான மக்கள்  அரசு மருத்துமனைக்கு செல்வதைத் தான் விரும்புகின்றனர். மப்புறங்களிலும் இதே  நிலைதான் உள்ளது. மினி கிளினிக்குகள் காலை மற்றும் மாலையில் ஒரு  குறிப்பிட்ட நேரம் மட்டுமே செயல்படுவதால் பெரும்பாலான மக்கள் ஆரம்ப சுகாதார  நிலையங்களை நம்பிதான் இருக்க வேண்டி உள்ளது. ஊதியம் மற்றும் பிற  செலவினங்களையும் சேர்த்து ஒரு மினி கிளினிக்குக்கு மாதந்தோறும் ஒரு லட்சம்  ரூபாய்க்கும் கூடுதலாக செலவாகிறது. தமிழகம் முழுவதும் உள்ள  மையங்களுக்கான மாதாந்திர செலவு 20 கோடி! ஒரு வருடத்தில் 240 கோடி ரூபாய்  காலியாகிவிடும். இந்த பணத்தை புதிய ஆரம்ப சுகாதர நிலையங்கள் அமைப்பது  மற்றும் அவற்றின் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு செலவழித்திருந்தால்  நிரந்தரமான பயன் கிடைத்திருக்கும். மொத்தத்தில், ஆட்சி முடியும் கடைசி  நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளை வேட்டையாட  நினைக்கும் அதிமுக அரசின் ஏமாற்று வேலைகளில் ஒன்றான அம்மா மினி  கிளினிக் திட்டம், திரிசங்கு சொர்க்கமாக அந்தரத்தில் தொங்குகிறது.மருந்தாளுனர்கள் போர்க்கொடி2000 அம்மா மினி கிளினிக்குகளிலும் மருந்து மாத்திரை கொடுக்கும் பணிக்கு  மருந்தாளுனர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்தாளுனர்கள்  நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளனர். இந்த  மையங்களில் மருந்தாளுனர்களை நியமிக்காமல் புறக்கணிப்பது, பார்மசி சட்டம்  42வது பிரிவின் கீழ் தங்களுக்குள்ள உரிமையைப் பறிப்பதாகும் என்ற அவர்களின்  வாதத்திலும் நியாயம் உள்ளது.தினசரி சராசரி 29 மட்டுமே!கடந்த 3 மாதத்தில் சராசரியாக தினசரி 29 பேர் மட்டுமே மினி கிளினிக்குகளில்  சிகிச்சை பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் அறிவித்த  2000 மினி கிளினிக்குகளில் 1943 கிளினிக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இதில்  தற்போது 17 லட்சத்து 80 ஆயிரத்து 882 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் காலை  11 லட்சத்து 53 ஆயிரத்து 346 பேருக்கும், மாலை 6 லட்சத்து 27 ஆயிரத்து 36  பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் சராசரியாக நாள்  ஒன்றுக்கு 29 பேர் மட்டுமே மினி கிளினிக் மூலம் சிகிச்சை பெற்றுள்ளனர். காலை  சராசரியாக 19 பேரும், மாலை 10 பேர் மட்டும் சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவருக்கு 60 ஆயிரம் ஊதியம்மினி கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர் பட்ட படிப்பும், செவிலியர்கள் அரசு  மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் பட்டய படிப்பும், பல்நோக்கு பணியாளர்கள்  8ம் வகுப்பும் படித்து இருக்க வேண்டும். மருத்துவர்களுக்கு ரூ.60 ஆயிரம்,  செவிலியர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம்  மாதாந்திர ஊதியம் வழங்கப்படுகிறது. 5 மணி நேர பணிமினி கிளினிக்குகள் தினமும் 8.00 மணி நேரத்துக்கு இயங்கும் என  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடைமுறை வேறாக உள்ளது. தற்போது காலை 9  மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும்  செயல்படுகிறது. இதன்படி நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மட்டுமே இயங்கி  வருகிறது. மேலும் வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே இயங்கும். சனிக்கிழமை  விடுமுறை அளிக்கப்படுகிறது.வேண்டாத வேலை….அம்மா மினி கிளினிக் திட்டம் குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கருத்து  கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்பு மிகவும்  வலிமையாக உள்ளது. அனைத்து கிராமங்களிலும் எட்டும் தூரத்தில் ஆரம்ப சுகாதார  நிலையங்கள் உள்ளன. சில கிலோ மீட்டர் தொலைவில் அரசு மருத்துவமனைகள்  உள்ளது. நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான் உள்ளது. அரசு மருத்துவமனை மற்றும்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருத்துவர் விடுமுறை என்றால் வேறு  மருத்துவர் அந்த பணியை மேற்கொள்வார். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர்  விடுமுறையில் சென்று விட்டால் என்ன செய்வார்கள். எனவே இதை ஒரு தோல்வி  அடைந்த திட்டம் என்று கூறுவதில் தவறு இல்லை. இந்த திட்டத்திற்கு ஒப்பந்தம்  மற்றும் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த  நிதியை வைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில்  உள்ள பணியிடங்களை நிரப்புவதுடன், கட்டமைப்புகளை மேம்படுத்தினால் அரசு  மருத்துவமனைகள் இன்னும் சிறப்பாக செயல்படும்… என்கிறார்கள்.நிரந்தரம் இல்லைமினி கிளினிக்குகளில் நியமிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள்  தற்காலிகப் பணியாளர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்களைப் பணி நிரந்தரம்  செய்யக் கோர முடியாது என்பதை விதிமுறையாகவே சேர்த்து கையொப்பம்  வாங்கிவிடுகிறார்கள். ‘இந்த வேலை அவுட் சோர்சிங் மூலமாக செய்யப்படும்  தற்காலிகமான நியமனம் என்பதை நான் அறிவேன். எனவே இந்த வேலையை அரசு  வேலையாக நிரந்தரம் செய்ய எதிர்காலத்தில் கோர மாட்டேன்’ என எழுதி வாங்கிக்  கொண்டுதான் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. சம்மதிக்காதவர்களுக்கு  பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இந்த திட்டமே நிரந்தரமானது அல்ல.  எப்போது வேண்டுமானாலும் மூடுவிழா நடத்தி விடுவார்கள். அப்படி இருக்கும்போது  இவர்களை நிரந்தரம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. ஏற்கனவே தற்காலிக  ஆசிரியர்களாக இருக்கும் ஆயிரக் கணக்கானோர் வரிசையில் அம்மா மினி கிளினிக்  ஊழியர்களும் சேர்ந்து புலம்ப வேண்டியது தான் என்கிறார்கள் விஷயம்  தெரிந்தவர்கள். பட்டி, டிங்கரிங்தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்கிற்கு என எந்த புதிய கட்டிடமும்  கட்டப்படவில்லை. ஏற்கனவே உள்ள கட்டிடங்களை பட்டி, டிங்கரிங் பார்த்து  பெயின்ட் அடித்து கிளினிக்காக மாற்றி அமைத்துள்ளனர்.* அறிவித்தது 2000 * ஆரம்பித்தது 1943* ஊழியர்கள்: தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர்* பரிசோதனை வசதி: உடல் வெப்பநிலை, ஆக்சிஜன், ரத்த அழுத்தம், சர்க்கரை,  ஹீமோகுளோபின் அளவு.* அளிக்கப்படும் சிகிச்சை: தலைவலி, காய்ச்சல், சளி போன்ற சாதாரண உடல்நலக்  குறைபாடுகளுக்கு மட்டும்.* வேலை நேரம்: காலை 9.00  11.00 வரை; மாலை 4.00  7.00 வரை…

You may also like

Leave a Comment

15 + seventeen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi