தேர்தலுக்கு முன் விடப்பட்ட ரூ.19.5 கோடி மதிப்பு டெண்டரை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு..!!

மதுரை: தேர்தலுக்கு முன் விடப்பட்ட ரூ.19.5 கோடி மதிப்பு டெண்டர்களை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏலதேசம், கிள்ளியூர், பலுக்கலூர் உள்ளிட்ட 13 பேரூராட்சிகளில் சாலை அமைப்பதற்காக அவசர கோலத்தில் முந்தைய அதிமுக அரசு டெண்டர் கோரியிருந்தது. 2 கோடிக்கு மேல் டெண்டர் விடப்படுமேயானால் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுக்க வேண்டும். விளம்பரம் கொடுக்கப்பட்ட 15 நாட்களுக்கு பிறகு தான் டெண்டர் விட வேண்டும் என்பது விதி. அதுமட்டுமின்றி 2 கோடிக்கு மேல் அரசு டெண்டர் விடும் பட்சத்தில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆனால் 15 நாட்களுக்கு பதில் 6 நாட்களுக்கு முன்பு மட்டுமே பத்திரிகைகளில் அதிமுக அரசு அறிவிப்பை வெளியிட்டது. 
இதுபோன்ற  எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் அவசரகதியில் ஒருசிலர் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு ரூ.19.5 கோடிக்கு டெண்டர் விட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன் விடப்பட்ட இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், 6 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டதால் ஒருசிலருக்கு சாதகமாக டெண்டர் அறிவிப்பு அமைந்துவிட்டதாகவும் ஆதலால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப்பகுதியின் முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷ் ராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 
விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் புகழ்காந்தி ஆஜராகி ரூ.2 கோடிக்கு மேல் டெண்டர் விட பல்வேறு வழிமுறைகளை தமிழக அரசு விதித்துள்ளது. ஆனால் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் தேர்தலை முன்வைத்து அதிமுக அரசு டெண்டர் விட்டுள்ளது. எனவே 13 பேரூராட்சிகளுக்கான ரூ.19.5 கோடி மதிப்பு டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் இது சம்பந்தமாக லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அதேபோல் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் வீரத்திடவன் ஆஜராகி இதுகுறித்து விரிவான விசாரணை செய்து பதில் அறிக்கை தாக்கல் செய்ய காலஅவகாசம் கூறினார். இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதில் தர உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி