தேர்தலில் 7,897 வாக்குகள் பெற்று வெற்றி: காங்கிரஸ் தலைவராக கார்கே தேர்வு: 26ம் தேதி பொறுப்பேற்பு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று சசிதரூரை வென்று புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 26ம் தேதி முறைப்படி பொறுப்பேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து 2வது முறையாக தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின், சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கடந்த 17ம் தேதி தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இம்முறை காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் வேட்புமனு தாக்கல் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினர். இதைத் தொடர்ந்து, கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் தேர்தல் நடந்தது. இதில், வாக்களிக்க தகுதி பெற்ற 9,900 வாக்காளர்களில் 9,500 பேர் வாக்களித்தனர். வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜூனா கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்றார். 416 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இதன் மூலம், கார்கே வெற்றி பெற்றதாக கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார். உடனே, கட்சி நிர்வாகிகள் மேள தாளங்களுடன் வெற்றியை கொண்டாடியதால் காங்கிரஸ் தலைமையகம் விழாக்கோலம் பூண்டது. தேர்தலில் வெற்றி பெற்ற கார்கே, வரும் 26ம் தேதி முறைப்படி கட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக கார்கே, இமாச்சல், குஜராத் சட்டப்பேரவை தேர்தல்களை தனது முதல் சவாலாக எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.24 ஆண்டுக்குப் பின்…* காங்கிரஸ் தலைவர் பதவிக்கு 22 ஆண்டுக்குப் பின் தேர்தல் நடத்தப்பட்டு, 24 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக, சீதாராம் கேசரி காந்தி குடும்பத்தை சேராத காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவர் 1998ல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.* அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள கார்கே, நிஜலிங்கப்பாவுக்குப் பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த 2வது காங்கிரஸ் தலைவராகவும், ெஜகஜீவன் ராமுக்குப் பிறகு இப்பதவியை வகிக்கும் 2வது தலித் தலைவராகவும் உள்ளார்….

Related posts

பாலியல் தொல்லை:‘ஈஷா’ மருத்துவர் மீது போக்சோ : நீதிபதியிடம் 9 மாணவிகள் வாக்குமூலம்

போக்குவரத்து விதிகளை மீறி கார் பயணம் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு ரூ. 7,000 அபராதம்

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு