தேன்கனிக்கோட்டை அருகே யானை மிதித்து விவசாயி பலி-உடலை சாலையில் வைத்து மறியல்

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே மரகட்டா பகுதியில் யானை மிதித்து விவசாயி உயிரிழந்தார். அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சகரம் நொகனூர் வனப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக 7 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இரவு நேரத்தில் மரகட்டா, நொகனூர், லக்கசந்திரம், மாரசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து தக்காளி, பீன்ஸ் மற்றும் தென்னங்கன்றுகளை நாசம் செய்துயும் யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று, மரகட்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்(60) என்பவர், தன்னுடைய மாடுகளை வனப்பகுதியையொட்டி மேய்ச்சலுக்காக கொண்டு சென்றுள்ளார். அப்போது, திடீரென அங்கு வந்த ஒற்றை யானை, வெங்கடேஷை சுற்றி வளைத்து தூக்கி வீசியது. இதில், ரத்த வெள்ளத்தில் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பியதால் சந்தேகமடைந்த உறவினர்கள் வெங்கடேஷை தேடிச் சென்றனர். அப்போது அவர் வனப்பகுதியில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று, வெங்கடேஷின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால், மரகட்டா சாலையில் திரண்ட கிராம மக்கள், சடலத்தை கொண்டு செல்ல விடாமல், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுமாறு பலமுறை வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காததாலேயே விவசாயி உயிரிழந்து விட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இறந்த வெங்கடேஷின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து, வெங்கடேஷின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்: ஆ.ராசா எம்பி பேட்டி

உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுக்காமல் தகராறு; குமரி அதிமுக நிர்வாகியை நிர்வாணமாக்கி தாக்கிய பெண்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டயாலிசிஸ் தொழில்நுட்பனர்களை நிரந்தரமாக நியமிக்க கோரி வழக்கு: சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு