தேனி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களை புனரமைக்கும் பணிக்கு நிதியுதவி பெறலாம்: கலெக்டர் தகவல்

 

தேனி, ஜூலை 3: தேனி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களை புனரமைக்க அரசின் நிதிஉதவி பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசால் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், தேவாலயம் கட்டப்பட்டு 10 முதல் 15 ஆண்டுகள் இருப்பின், பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், 15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளாக இருப்பின் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும் தேவாலய கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது. கிறிஸ்துவ தேவாலயங்களில் கூடுதல் பணிகள் மேற்கொள்ள விரும்புகிறவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை