தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயம்

 

ஈரோடு, ஆக.5: வெளியேற வழியின்றி சாக்கடையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, 28வது வார்டுக்கு உள்பட்டது அண்ணாமலை லே-அவுட், ஈரோடு, பிரதான பேருந்து நிலையத்துக்கு எதிரில் அமைந்துள்ள இப்பகுதியில், மருத்துவமனைகள், வங்கிகள், அரசுத்தேர்வு பயிற்சி மையங்கள், மேன்சன் மற்றும் பலதரப்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் உள்ள 2வது வீதியில் உள்ள ரெப்கோ வங்கி- நுண்கடன் பிரிவு அலுவலகத்துக்கு எதிரில், அரசன் கண் மருத்துவமனையின் இலவச சிகிச்சை பிரிவின் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவு நீர் வெளியேற வழியின்றி அடைத்து, சாலை மட்டத்துக்கு நிரம்பி வழிகிறது. மேலும் இந்த சாக்கடை, பிளாஸ்டிக் டம்ளர்கள், கண்ணாடி பாட்டில்களாலும் நிரம்பி வழிகிறது. வெளியேற வழியின்றி மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் இந்த கழிவு நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்த வீதி முழுவதும் மாபெரும் கொசு உற்பத்தி மையமாக உருவாகியுள்ளது.

வங்கி, மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இப்பகுதியில் மாதக்கணக்கில் தேங்கி நிற்கும் இந்த சாக்கடைக் கழிவு நீரால் அப்பகுதியினரும், அங்கு வந்து செல்வோரும் கடும் நோய் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பல மாதங்களாக வெளியேற வழியின்றி தேங்கி நிற்கும் இந்த கழிவு நீரை அகற்றி, அப்பகுதியில் சாக்கடை நீர் தடையின்றி வெளியேற மாநகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை