தெலங்கானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்!: கொரோனாவை கட்டுப்படுத்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அதிரடி..!!

தெலுங்கானா: தெலுங்கானாவில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் சோதனைகளை அதிகப்படுத்தவும் தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்தவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் அடுத்த ஒருவார காலத்திற்குள் தடுப்பூசி போட அவர் உத்தரவிட்டார். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார். இந்தியாவில் சமீப காலமாக கொரோனா பரவல் 2ம் அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதே தீர்வு என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். பொதுவெளியில் முகக்கவசம், சமூக இடைவெளியை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசும் அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் அரசின் வழிமுறைகளை துளியும் பின்பற்றாத மக்கள், பொதுவெளியில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிகின்றனர். இதன் காரணமாக கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து புதுச்சேரியில் முகக்கவசம் அனியாவிடில் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்படும் என ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை விடுத்துள்ளார். …

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்