தெருவில் குப்பை கொட்டும் வியாபாரிகளுக்கு அபராதம் போளூர் செயல் அலுவலர் எச்சரிக்கை

போளூர், ஜூன் 27: போளூர் பேரூராட்சியில் தெருவில் குப்பை கொட்டும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று செயல் அலுவலர் முகம்மதுரிஸ்வான் எச்சரிக்கை விடுத்துள்ளார். போளூர் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் முகம்மதுரிஸ்வான் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழகத்தில் போளூர், தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், பெரியநாயக்கன்பாளையம், சூலுர், தரங்கம்பாடி, கோத்தகிரி உட்பட 6 டவுன் பஞ்சாயத்துக்கள் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி மையமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 490 டவுன் பஞ்சாயத்துக்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், போளூர் நகரை பார்வையிட வருவார்கள்.

எனவே, தூய்மையான போளூர் நகரம் என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி, நகரில் எந்த இடத்திலும் குப்பைகள் கண்ணில் படக்கூடாது. வியாபாரிகள் நலன் கருதி இனிமேல் காலை 6 மணி முதல் 8 மணி வரை, பிறகு 9 மணி முதல் 11 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என 3 ஷிப்டுகளாக குப்பை அகற்றும் பணி நடைமுறைபடுத்தப்படும். இதனை மீறி தெருவில் குப்பை கொட்டும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். போளூர் நகரை சுற்றி சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு கேரி பேக்குகள் பறிமுதல் செய்யப்படும். கேரி பேக் தருவதில்லை என்று அனைத்து கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் சண்முகம், நிர்வாகி நரேஷ்குமார், மன்ற உறுப்பினர்கள் ஹயாத்பாஷா, ராம்மோகன், பழனி, கூட்டுறவு வங்கி தலைவர் தனசேகரன் மற்றும் வணிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், தலைமை எழுத்தர் முகம்மது இசாக் நன்றி கூறினார்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி