துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தலையில் குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் காயம்: தாம்பரம் அருகே பரபரப்பு

சென்னை, ஜன.5: தாம்பரம் அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது, தலையில் குண்டு பாய்ந்து 13 வயது சிறுவன் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் செங்கல்பட்டு ரைபிள் கிளப் எனும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர். ஏர்கண் மூலமாக இந்த பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் சித்தார்த், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான். அப்போது, ஏர்கன் தவறுதலாக வெடித்து அதிலிருந்து வெளியேறிய அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சிறுவனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த பீர்க்கன்காரணை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிறுவன் பயன்படுத்திய ஏர்கண் தவறுதலாக வெடித்ததில், அதிலிருந்து வெளியேறிய அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்து காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், பயிற்சியின்போது தவறுதலாக ஏர்கண் வெடித்து காயமடைந்த சிறுவன், தற்போது நலமாக உள்ளான். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர். இந்த சம்பவம் முடிச்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை