Saturday, September 21, 2024
Home » துன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை

துன்பங்களை துடைத்தெறிவாள் அஷ்டபுஜ துர்க்கை

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் தோழிஅம்மன்குடிசக்தி தரிசனம் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த மகாசக்தியை வேப்பிலை முதல் விக்ரகங்கள் வரை எல்லாவற்றிலும் கண்டு வணங்குகிறோம். பெண்மை  எனும் பெருஞ் சக்தியானது, சிறுமியாகவும், தாய்மையாகவும், வீறு கொண்டெழும் காளியாகவும், பாம்பின் புற்றினூடேவும், சிலுசிலுக்கும்  பச்சை மரங்களினூடேயும், நட்டு வைத்த கல்லுக்குள்ளும் என்று அம்பாள் லட்சம் விதமாக தன்னை வெளிப்படுத்துகிறாள். அந்தச் சக்தி  கனவில் வந்து ‘‘நீ எனக்கு கோயில் கட்டும் முன்பே அதோ அந்தப் புற்றினுள் நான் தவமிருக்கிறேன். அங்கு வந்து என்னைப் பார்’’ என்று  கருணை பொங்க பேசியிருக்கிறாள். அண்டி வணங்கி அவளின் அருளில் நனைந்தோர் புற்றைச் சுற்றி சுவர் எழுப்பி கோபுரம் நிமிர்த்தி  வணங்கினர். எந்தப் பிரச்னை ஆனாலும் அம்மா…. தாயே… மகாசக்தி… தயாபூரணி என்று கைகூப்பி கண்ணீர் மல்கி கருணையில் நனைந்தெழுந்தனர்.  பக்தர்கள் பால்குடம் சுமந்தும், மஞ்சள் பூசியும், குங்குமம் சாற்றியும், பொங்கல் வைத்தும், வேப்பிலை சேலை அணிந்தும் என பல  விதங்களில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். ‘உன்னை இயக்கும் அதே சக்தி தான், ஆங்காங்கு ஆலயங்களில்  வெளிப்பட்டிருக்கிறேன். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன்’ என்று சாக்த நூல்கள் கூறுகின்றன. குங்குமச் சந்தன மஞ்சளாக அருள் பொழியும்  அம்மனின் சக்தி தரிசனமாக கோயில்களை தரிசிப்போம் வாருங்கள். பிறகு வாழ்வு மணம்  கமழ்வதை அனுபவத்தில் உணர்வீர்கள். துர்க்கை எனும் மகாசக்தி பாரத தேசத்தின் சகல பிரதேசங்களிலும் மிகப் பெரும் தெய்வமாக வணங்கப்படுகின்றாள். மா துர்க்கா… மா  துர்க்கா… என்று வடகோடியிலிருந்து தென் குமரி வரை பக்தர்களால் துதிக்கப்படுகின்றாள். அப்பேற்பட்ட துர்க்கை கும்பகோணத்திற்கு  அருகேயுள்ள அம்மன்குடியில்  அஷ்டபுஜதுர்க்கை எனும் திருப்பெயரில் அருட்கோலோச்சுகின்றாள். அவள் அத்தலத்தில் எப்படி அமர்ந்தாள்  எனும் புராணக் கதையை கொஞ்சம் காண்போம்.  அசுரச் சகோதரர்களான கரம்பனும், ரம்பனும் தவம் மேற்கொள்ள போன போது தேவர்கள்  மிரண்டுதான் போயினர்.  ரம்பன் எனும் அசுரனின் ரத்தம் கொதித்தது. சித்தம் முழுதும் தன் சந்ததியை மற்றும் சக்தியை பெருக்க வேண்டும் என்று யோசித்தது,  எருதாக வடிவெடுத்தான். எதிரே வரும் பெண்ணெருமையை இணையாக்கிக் கொண்டான். குறிப்பிட்ட காலம் வரை எருது வடிவிலிருந்ததை  கண்டு கொண்ட இன்னொரு எருது ரம்பனை கொம்பால் குத்தியது. எருது வடிவிலிருந்த ரம்பன் தன் பழைய உருவம் பெற்று ரத்த  வெள்ளத்தில் சரிந்தான். ஒன்றுக்கு இரண்டாக தலைவர்களை இழந்துவிட்ட அசுர ஜனங்கள் ரம்பனை சிதையில் வைத்து தீ மூட்டியது.  ரம்பனிடம் இணைந்த அந்த பெண் காட்டெருமை பதிவிரதை போன்று தீப்பாய்ந்தது. இதைப் பார்த்த அசுரர்கள் ஆச்சரியமுற்றனர். ஆனால்,  அதையும் தாண்டி இன்னொரு அற்புத சம்பவமும் நடந்தது. பெண்ணெருமை பாய்ந்த வேகத்தில் அதற்குள்ளிருந்து கருப்பாக, எருமைத்  தலையோடு மானுட உடம்போடு அதீத சக்தி தளும்ப, நான்கு கால் பாய்ச்சலாக வெளிவந்து ஒருவன் வீழ்ந்தான். அக்னி நிம்மதியானார்.  ரம்பன் அமைதியாய் மேலுலகம் ஏவினான். அசுரக் கூட்டம் புதியவனை ஆரத்தழுவிக்கொண்டது. ‘மகிஷன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தது. தந்தையின் விருப்பத்தை மகிஷன்  நிறைவேற்றத் துடித்தான். எருமைபோல் சோம்பியிருக்காது ‘போர்… போர்’ என திரிந்தான். தேவர்களை எதிர்கொண்டான். இந்திரன் இடிந்து  போனான். முறுக்கேறிய புஜங்களும், வகை வகையாக வாள் தரித்து நிற்கும் அசுரச் சேனையை பார்த்து தேவர்களில் சிலர் மயங்கியே  வீழ்ந்தனர். மகிஷன் முழு வலிமையோடு இறங்க தேவப் படைகள் சிதறி ஓடியது. ஆனால், மீண்டும் வந்து போருக்கு நின்றது. இதைப்  பார்த்த மகிஷனுக்கு கலக்கம் உண்டா யிற்று. மரணமென்பதே இல்லாமல் இருப்ப தால்தான் விளையாடு கிறார்கள். இவர்களை  முழுமையாக ஜெயிப்பது அரிதே எனும் எண்ணம் கொண்டான். தன் தந்தையின் நினைவு சட்டென்று நெஞ்சில் நிழலாட, அவரின் தபோ பலத்தாலேயே தான் உருவாகியுள்ளோம் என்று எண்ணம்  உதித்தது. பிரம்மனை நோக்கி தவமிருந்தால் கேட்டதையே கொடுத்து விட வேண்டும். இது பராசக்தியின் மீறவொண்ணாத ஆணை என்று  தெரிந்திருந்தான். மேரு மலைக்கு ஓடினான். தவமிருந்தான். பிரம்மனும் சட்டென்று பிரசன்னமானார். ‘தனக்கு மரணம் வராதிருக்க  வேண்டும்’ என்று அவன் கேட்க, ‘‘என் சக்திக்கு மீறியதை என்னால் கொடுக்க இயலாது” என்றார் பிரம்மன்.‘‘பெண் ஒருத்தியைத் தவிர  வேறு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது’’ என இறுதியாகக் கேட்டான். பிரம்மன் வரம் தந்தார். பிரம்மனின் வாக்கில் அவரறியாது  பிரமாண்ட சக்தி வெளிப்போனது.மகிஷனின் முழுக் கூட்டமும் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டது. தேவலோகத்தை அநாயாசமாக அசுரலோகமாக்கிக் கொண்டது.  மானிடர்களும், அந்தணர்களும் இருண்டனர். இந்திரன் பரிதாபமாக தளர்ந்துபோய் தனது குருவான வியாழ பகவான் எனும் பிரஹஸ்பதியின்  பாதத்தில் சோர்வாகச் சரிந்தான்.குரு தேவர்களின் நிலையினை எண்ணி வருந்தினார். “வேறு எவருக்கும் கிடைக்காத எல்லையில்லா  சுதந்திரம் அளித்திருக்கிறாள் ஆதிமாதா. அதை சுத்தமாக மறந்துவிட்டு வெற்றுச் சுகத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டீர்கள். சித்தத்தை  சக்தியிடம் வைத்து நன்றி பெருக்கோடு பக்தி புரிந்திருக்க வேண்டும். இப்போதாவது அன்னையின் நினைவு வருகிறதா உனக்கு?  பராசக்தியிடம் பாரம் கொடுத்துவிடு. பிரம்மன் அளித்த வரம் குறித்து திருமாலிடம் சொல். ஈசனின் தாள் பணிந்து உருகு. அதற்கு முன்பு  ஒருமுறை தளராது போர்க்களம் சென்று போரிட்டுப் பார்” என்று அறிவுரை கூறினார் பிரகஸ்பதி.  இந்திரன் இப்போது தெய்வ நினைவோடு போரிடுவதை விட தெய்வத்தையே போருக்கழைக்கலாமே என்று ஆழமாக யோசித்தான்.  பரமேஸ்வரன், மகாவிஷ்ணுவின் பாதங்களில் சகல தேவர்களும் போய் வீழ்ந்தனர். ஈசனும், மகாவிஷ்ணுவும் கண்களில் கனல் பொங்க  கோபாவேசத்தோடு தவம் செய்தனர். யாவினுள்ளும் நிறைந்திருக்கும் மகா சக்தியான பராசக்தியை நாடும் மாதவம் அது. தேவர்களும்  அவர்களோடு இணைந்தனர். சட்டென்று பிரபஞ்சமே ஒளிரும் பேரொளி ஹரியினுள்ளும், அரனுள்ளுமிருந்து ஜோதியாய் வெடித்தது. அது  மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. நாராயணனின் புஜபலம் முழுதும் திரட்டி பதினெட்டுத் திருக்கரங்களோடு நின்றாள் பிராட்டி.  பிரம்மனின் செம்மை அங்கு பாதங்களாக பரிமளித்தன. ஈசனின் வெள்ளொளி திருமுகமாக மலர்ந்தது. எமனின் கருமை கருங்குழல்  கற்றையாக காற்றில் அலைந்தது. இந்திரனின் ஜால சக்தி அம்மையின் இடைப் பகுதியாயிற்று. பாத விரல்களில் சூரியனின் ஜோதி தெறித்துப் பரவியது. ஈசனின்  இணையற்ற பக்தனான குபேரனின் ஒளி திருமகளின் நாசியாகி மின்னியது. அக்னி அவளின் திருநயனங்களில் உக்கிரமாகக் குடி புகுந்தார்.  வாயு இனிய கானமாய் அவள் செவிக்குள் புகுந்தான். அருணையின் செவ்வொளி கீழுதடாகவும், முருகனின் செவ்வேள் உதடாகவும்  ஒளிபரப்பி சிவந்திருந்தது.தங்களுக்குள்ளிருந்தே பிரமாண்டமாகப் பரந்தெழுந்த மகாசக்தியின் ஒளியையும், உருவமும் பார்த்து தேவர்கள்  கண்களில் நீர் பொங்க, பாதம் பணிந்துத் துதித்தனர். ‘ஜெய்… ஜெய்…’ என விண்முட்டும் கோஷம் எழுப்பினர். இது நிகழ்ந்தது மஹாளய  அமாவாசைக்கு முதல் தினம். மகாலக்ஷ்மி துர்க்கையாக எழுந்தாள்.  சகல ஆயுதங்களையும் அவள் முன் மலையாகப் பரப்பினர். ராஜராஜேஸ்வரியாக நின்றவளுக்கு ராஜசிம்மத்தையே கொடுத்தான் இமயத்து  ராஜன் ஹிமவான். சிம்மம் பிடரியைச் சிலிர்த்து கம்பீரமாக நடந்து தேவியின் அருகில் நின்றது. மகிஷன் எங்கோ தொலைதூரத்தில்  தேவர்களின் பிளிறல் கேட்டு முகம் சிவந்தான். அவன் திரும்புவதற்குள் சிம்மத்தின் கர்ஜனை அவன் காதை செவிடாக்கியது. மகாலக்ஷ்மி  மாபெரும் உருவோடு அவனெதிரே நின்றாள். மகிஷன் அவளை மதியாது ஆயுதங்களை வீசினான். அதை புல்லாக கிள்ளி எறிந்தாள். அசுரக்  கூட்டம் அதற்குள் பேயாகப் பறந்து தாக்கினர். அன்னை அசுரர்களின் உடலைச் சீவி எறிந்தாலும், உள்ளிருக்கும் ஜீவன்களை பரம  கருணையாக தன்னிடம் அழைத்துக் கொண்டாள். தேவர்களுக்குக் கூட கிடைக்காத பாக்கியம் இது! இறுதியாக எருமைத் தலையனான மகிஷனை வாரி எடுத்தாள் துர்க்கை. தன் இரு பாதங்களையும் மகிஷன் மீது வைத்து நசுக்கினாள்.  மகிஷன் அலறி மலைபோலச் சரிந்தான். தேவர்கள் துர்க்கா மகாலக்ஷ்மியை பூத்தூவி அர்ச்சித்தனர். இவளே ‘மகிஷாசுரமர்த்தினி’  எனப்படுபவள். ‘மர்த்தனம்’ என்றாலே ‘மாவுபோல் அரைப்பது’ என்று பொருள். மகிஷனின் இறுகிய கல் போன்ற அகங்காரத் தலையை  சிதைத்து வெண் மாவாய் இழைத்ததாலேயே ‘மகிஷாசுரமர்த்தினி’ என அழைக்கப்படுகிறாள்.பெரும் வதம் முடித்த துர்க்கா தேவி  நானிலமும் நடந்து சோழ தேசத்தின் மையமான, இன்றைய அம்மன்குடி எனும் தலத்தில் அமர்ந்தாள். ரத்தம் தோய்ந்த ஆயுதங்களை தீர்த்தத்தில் கழுவ அது கங்கையாகப் பொங்கியது. தேவி தியானத்தில் அமர்ந்ததால் இத்தலத்தை ‘தேவி  தபோவனம்’ என அழைத்தனர். ராஜராஜசோழனின் படைத் தலைவரான கிருஷ்ணன் ராமனான பிரம்மராயரின் சொந்த ஊர் இதுவேயாகும்.  அம்மன்குடி கோயில் கட்டி அதற்கு ராஜராஜேஸ்வரம் என்று பெயர் சூட்டியதாகக்கூட வரலாறு உண்டு. அமண்குடி என்று சமணர்கள் வாழ்ந்த  இவ்வூரை இப்போது ‘அம்மன்குடி’ என்று அழைக்கின்றனர். கோயில் சிறியதுமல்லாது பெரியதுமல்லாது நடுவாந்திரமாக இருக்கும். ஆனால்,  கீர்த்தியிலும், புகழிலும் புராணம் சொல்வதைப் பார்த்தால் திகைப்பும், பிரமிப்பும் ஒன்றையொன்று விஞ்சும். துர்க்கைக்கு ஈசன் சந்நதிக்கும்,  அம்பாள் சந்நதிக்கும் இணையாக தனிக் கருவறையில் துர்க்கா தேவி சிம்ம வாகனத்தில் எழில் கொஞ்சும் திருமுகத்தோடும், அருள்  பூக்கும் கண்களோடு அருள்பாலிக்கிறாள்.    பிரம்மராயர் கங்கை வரை போர்புரிந்து அழகான விசித்திரமான கல்லாலான விநாயகர் சிலையைக் கொண்டு வந்தார். பகல் பொழுதில்  சூரிய கிரணங்கள் பட, சிலை வெண்மையாக ஒளிரும். அந்தி சாயும்போது சிலை இருளாக கறுக்கும். கை வைத்தாலே வாழைப் பழம்  போன்று வழுக்கும் கல் அது. இப்போதும் புதியதாக உள்ளதைப் பார்க்க ஆச்சரியத்தில் கண்கள் அகல விரிகிறது. கோயிலின் முகப்பு  வாயிலில் உள்ள விநாயகப் பெருமானை தரிசித்து உள்ளே நகர இடது புறத்தில் துர்க்கையின் சந்நதி. பிரம்மராயர் காலத்திய துர்க்கையின்  சிலை காலத்தால் சற்று தேய்ந்து போனதால், அதே அழகில் அறுபது வருடம் முன்பு துர்க்கையை பிரதிஷ்டை செய்துள்ளனர். பழைய  சிலையை உள்ளேயே துர்க்கைக்கு அருகேயே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர். துர்க்கா சிம்ம வாகனத்தின் மீதமர்ந்து எண்கரங்களோடு  அமர்ந்திருக்கும் கோலம் பார்க்க உள்ளம் கொள்ளை கொள்ளும். அதில் முகம் மலர்ந்து மெல்லியதாக புன்னகைக்கும் அழகை பார்க்க நம்  அகம் முழுதும் அவள் அருளமுதம் நிரம்பும்.  இத்தேவியின் பாதம் பணிவோருக்கு கைமேல் கனியாக வெற்றியை ஈட்டித் தருவாள் இந்த அஷ்டபுஜ துர்க்கை. வாழ்வின் வெம்மை  தாங்காது பயம் என்று கைகூப்பி நின்றோருக்கு அபயமளித்து அருட் கடலில் ஆழ்த்துவாள் இந்த அம்மன்குடி நாயகி. தேவியின் சந்நதிக்கு  அருகேயே பார்வதி தேவியின் சந்நதியும், கைலாச நாத ரின் மூலக் கருவறையும் உள்ளன. துர்க்காவே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த  பாவம் போக்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் பகருகின்றன. அம்மனின் வாயிலில் மிக அபூர்வமான ஒரு  சரஸ்வதியின் சிலை உள்ளது. கண்கள் மூடி, கைகளில் ஜபமாலையோடு வீற்றிருக்கும் கோலம் காணுதற்கு அரியதாகும். நவராத்திரியில்  பிரதம நாயகியான லக்ஷ்மி துர்க்காவோடு தானும் தவத்தில் ஆழ்கிறாளோ என்று தோன்றுகிறது. நவராத்திரியில் கடைசி வதமான சும்ப-  நிசும்ப வதத்திற்கு தயாராவதுபோலகூட உணர முடிகிறது. அருகேயே விநாயகர் சிலை செதுக்கப்பட்ட விசித்திரமான கல்லாலான சூரியனின் அற்புதச் சிலையும் உள்ளது. நவ கிரகங்களுக்கு  அதிபதியான துர்க்கை இத்தலத்தில் உறைவதால் இக்கோயிலுக்குள் நவகிரகங்கள் இல்லை. ஏராளமான சோழர் காலக் கல்வெட்டுகள்  காணப்படுகின்றன. கோயிலின் கோஷ்டத்து மேல் பகுதியில் ராஜராஜசோழன் கம்பீரமாக அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒரு புடைப்புச்  சிற்பம் உள்ளது. இத்தலம் கும்பகோணத்திலிருந்து பதினான்கு கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம்-உப்பிலியப்பன்  கோயில்-அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை  அடையலாம்.-கிருஷ்ணாபடங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்

You may also like

Leave a Comment

five × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi